Last Updated:
2022-ல் பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்காக அவர் 3 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்
தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சியை சேர்ந்த இவர் போதைப் பொருள் பயன்படுத்திய புகாரின் அடிப்படையில் ஏற்கனவே 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் புகாரில் சிக்கி 8 ஆண்டுகள் தடைபெற்றுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், இந்தியாவின் மிகவேகமான ஓட்டப்பந்தய வீராங்கனைகளில் ஒருவர். 2021-ல் நடந்த ஃபெடரேஷன் கோப்பை தொடரில் 100 மீட்டர் ஓட்டத்தில் பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்தார். மேலும், தேசிய அளவிலான இந்த போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை முறியடித்து தங்கம் வென்றதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார்.
200 மீட்டர் தூரத்தை தனலட்சுமி 20.26 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். அவர் மீது ஊக்க மருந்து பயன்படுத்தினார் என எழுந்த குற்றச்சாட்டின்பேரில், விசாரணை நடத்தப்பட்டது.
2022-ல் பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதற்காக அவர் 3 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதிலிருந்து மீண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் களத்திற்கு வந்தார்.
இந்த நிலையில் மீண்டும் ஊக்க மருந்து சோதனை புகாரில் சிக்கி தனலட்சுமி சேகர் 8 ஆண்டுகளுக்கு தடை பெற்றிருக்கிறார். இந்த 8 ஆண்டு தடை காரணமாக, அவரது விளையாட்டுப் பயணம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே கருதப்படுகிறது. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ஒரு வீராங்கனை இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jan 05, 2026 10:07 PM IST


