ஞானம் எனும் கல்விச் செல்வத்துக்கு அழிவே கிடையாது. மேலும் காசு, பணம், நகை, நிலம் போன்ற செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. கல்விச் செல்வம் நேர் மாறானது. கல்வி கொடுக்கக் கொடுக்க குறையாதது.
ஒருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, நமக்கு ஞானமும் கல்வியும் அதிகரிக்கும். நம் கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி தேவிக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி.
கையில் புஸ்தகத்தோடு காட்சி தரும் ஹயக்ரீவர் மனித உடலும், குதிரை முகமும் கொண்டவர். இவர் மஹாவிஷ்ணுவின் அவதாரம். இந்த ஹயக்ரீவர் அவதாரம் தசாவதாரத்திற்குள் ஒரு அவதாரம் அல்ல. மேலும், தச அவதாரங்களுக்கு முந்தையது. கல்விச் செல்வத்தோடு சேர்த்து, பொருள் செல்வத்தை தரும் விதமாக தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார். இவர் “லட்சுமி ஹயக்ரீவர்” எனப்படுகிறார்.
ஹயக்ரீவர் எப்படித் தோன்றினார்?
பகவான் மஹாவிஷ்ணு உலகைப் படைப்பதற்காக பிரம்மனை படைத்தார். பிரம்மனுக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.
அதன் பிறகு… ஒருமுறை மஹாவிஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து மது, கைடபன் என்ற இரண்டு தோன்றினர். இவர்கள் மஹாவிஷ்ணுவிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.

வேதங்களை இழந்த பிரம்மன், அவற்றை மீட்டுத் தரும்படி மஹாவிஷ்ணுவைச் சரணடைந்தார். மஹாவிஷ்ணு வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே மஹாவிஷ்ணு தானும் குதிரை முகத்துடன் அவதாரம் எடுத்துக் கொண்டார். இவரே ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். இவர் அசுரர்களுடன் போரிட்டார். அசுரர்கள் மிகவும் பலசாலிகளாக இருந்தனர். அதனால் போர் பல வருடங்கள் இடைவிடாது நடந்தது. ஹயக்ரீவர் மிகவும் உக்ரமாக சண்டையிட்டார். இறுதியில் இரண்டு அசுரர்களையும் போரில் கொன்றார். வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.
அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. அதனால் தங்களை புனிதமாக்கும்படி ஹயக்ரீவரிடம் வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த ஹயக்ரீவர் வேதங்களை உச்சிமுகர்ந்தார். அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.
அசுரர்களுடன் போரிட்டதால் ஹயக்ரீவர் மிகவும் உக்ரமாக இருந்தார். அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் தேவர்கள் அமரச் சொன்னார்கள். மகாலட்சுமி அவரது இடது மடியில் அமர்ந்தார். இவரை “லட்சுமி ஹயக்ரீவர்” என்றனர். வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்விக்குத் தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், ஹயக்ரீவர் லட்சுமியை தனது இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார்.
கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்க வேண்டும். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் ஹயக்ரீவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.
ஹயக்ரீவர் ஸ்லோகம்
ஞானானந்த மயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே இதன் பொருள்…
தூய மெய்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய்மையானவரும், அறிவு யாவற்றுக்கும் ஆதாரமானவருமாகிய ஹயக்கிரீவரை வணங்குகிறேன்.
The post கல்விச் செல்வத்தை வழங்கும் ஸ்ரீஹயக்ரீவர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

