Last Updated:
17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்திற்கு திரும்பியிருக்கிறார் தாரிக் ரஹ்மான். வங்கதேச பொதுத்தேர்தலை குறிவைத்து களமிறங்கி இறங்கி இருக்கும் தாரிக் ரஹ்மானின் பின்னணியை தற்போது பார்க்கலாம்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும், வங்கதேச தேசியவாத கட்சியைச் சேர்ந்த கலீதா ஜியாவும் இருபெரும் பெண் துருவங்களாக இருந்து வந்தனர். 2001 முதல் 2006 வரை பிரதமராக கலிதா ஆட்சிபுரிந்த பின்னர், அவர் மீதும், அவரது மகன் தாரிக் ரஹ்மான் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நெருக்கடி மற்றும் மருத்துவ காரணங்களுக்காக, 2008இல் லண்டனுக்கு சென்றார் தாரிக் ரஹ்மான்.
2009இல் ஆட்சியை கைப்பற்றிய அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசினா, அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். 2018இல் தனது அரசியல் எதிரியான கலீதா ஜியாவையும், ஊழல் வழக்கில் சிறையில் அடைத்தார். கடந்த ஆண்டு அவாமி லீக் ஆட்சிக்கு எதிராக வன்முறை வெடிக்க, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. கலீதா ஜியாவும் விடுதலை செய்யப்பட்டார்.
ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் சங்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டதால், வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. இப்படியான பதற்றமான அரசியல் சூழலில்தான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பியிருக்கிறார் கலீதா ஜியாவின் மகனும், தேசியவாத கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான்.
டாக்கா விமான நிலையத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் தாரிக் ரஹ்மான் வந்திறங்க, அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பிரமாண்ட வரவேற்பை உற்சாகமாக ஏற்ற தாரிக் ரஹ்மான், தனது ஷூக்களை கழற்றி வெறும் காலில் தனது தாய்மண்ணில் காலடி எடுத்து வைத்தார். பேருந்தில் ஊர்வலமாக சென்ற தாரிக் ரஹ்மான், டாக்காவில் நடந்த கூட்டத்தில் நம் தேசத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என சூளுரைத்தார்.
ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, கலீதா ஜியாவின் தேசியவாத கட்சி வங்கதேச மக்களிடையே பெரும் எழுச்சியை கண்டு வருகிறது. உடல்நலக்குறைவால் கலீதா பாதிக்கப்பட்டிருக்க, லண்டனில் இருந்தபடியே கட்சி கூட்டங்களை ஆன்லைன் மூலம் ஒருங்கிணைத்து வந்தார் தாரிக் ரஹ்மான். வங்கதேசத்தில் இடைக்கால அரசை நடத்தி வரும் முகமது யூனுஸ் உடன், தாரிக் ரஹ்மானுக்கு ஆரம்பத்தில் இணக்கமான சூழல் இருந்த நிலையில், தற்போது அதில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படியான சூழலில், வரும் பிப்ரவரி மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட ஏற்கெனவே ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது. அதேசமயம், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி மீதான தடையை இடைக்கால அரசு நீக்கியது. மாணவர்கள் அமைப்பும் களத்தில் குதித்திருக்கும் சூழலில், வெற்றி வாய்ப்பு என்னவோ, கலீதா ஜியாவின் தேசியவாத கட்சிக்கே இருப்பதாக அமெரிக்காவின் சர்வதேச குடியரசு நிறுவனம் கணித்துள்ளது.
தேர்தல்களத்தில் கலீதாவின் மகன் தாரிக் ரஹ்மான் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார், அரசியல் இடைவெளியை நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Dec 26, 2025 10:04 AM IST
17 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான்.. வங்கதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு


