Last Updated:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களை கட்டி வரும் இந்த வேளையில், வேறு எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்துவதுமாக ஏராளமான சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலுக்குள் திடீரென புகுந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த கிறிஸ்துமஸ் அலங்காரங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். ஆவேஷமாகவும், ஆக்ரோஷமாகவும் காணப்பட்ட அந்த கும்பல், மாலில் வேலைபார்க்கும் ஊழியர்களையும் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்துமஸ்ஸை ஒட்டி சாண்டா தொப்பிகளை விற்பனை செய்து வந்த ஏழை சாலையோர வியாபாரிகளை மதவாத கும்பல் ஒன்று மிரட்டியுள்ளது. இது இந்து ராஷ்டிரம்.. இங்கே கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது..” என்று அந்த கும்பல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவர்களை உடனடியாக பொருட்களை மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு காலி செய்யுமாறு அந்த கும்பல் விரட்டியிருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதேபோல் தலைநகர் டெல்லியில், லஜ்பத் நகரில், பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலர் சாண்டா தொப்பி அணிந்திருந்த கிறிஸ்தவப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மதமாற்றம் செய்வதாகக் குற்றம் சாட்டிய அந்த கும்பல், அங்கிருந்து உடனடியாக சென்றுவிடும்படி கட்டாயப்படுத்தி விரட்டியிருக்கின்றனர்.
இதனிடையே கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் கிறிஸ்துமஸை ஒட்டி குழந்தைகள் குழுவாக சேர்ந்து பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆவேச கும்பல் ஒன்று அவர்களின் இசைக்கருவிகளைச் சேதப்படுத்தி விரட்டியடித்திருக்கின்றனர். மேலும், வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ பாடல்கள் பாடிய சிறுவர்களுக்கு மிரட்டல் விடுத்து மன உளைச்சளை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் பேரில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், தேவாலயங்களுக்குள் அத்துமீறி நுழைந்த வலதுசாமி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நள்ளிரவு பிரார்த்தனைகளை தடுத்துநிறுத்தியதுடன், கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளன. மேலும், அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களையும் காவல்துறையினர் முன்னிலையிலேயே தாக்கியுள்ளனர்.
சத்தீஸ்கரில், ஒரு முழு கிறிஸ்தவ கிராமமும் தாக்கப்பட்டு, அவர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்கள், கிறிஸ்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை குறிவைத்து தாக்குதல்.. நாடு முழுவதும் அரங்கேறிய வன்முறை சம்பவங்கள்


