மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி என்பவர் மூலமாக மும்பை பகுதிகளின் வீடியோக்கள் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கு கிடைத்ததும், அதனை அடிப்படையாக வைத்தே அவர்கள் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, உளவுத் தகவல்களை சேகரிக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த வகையில், நாட்டு மக்கள் தொடர்பான முக்கியமான அனைத்து விவரங்களையும் ஓரிடத்தில் சேகரித்து வைத்து உரிய நேரத்தில் புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்க வகை செய்யும் ‘நேட் கிரிட்’ (Natgrit) எனப்படும் தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையம் என்ற அமைப்பை உருவாக்கியது. இது கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது.
இதில், நாட்டு மக்களின் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள், விமானம் மற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள், குடியேற்றத் தகவல்கள், வரி செலுத்துபவர்கள், கடன் அட்டைகளை வாங்குபவர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என அனைத்து விவரங்களும் உடனுக்குடன் இந்த அமைப்பில் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தேவைப்படும்பட்சத்தில், மாநில காவல்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை, ரா அமைப்பு உள்ளிட்ட புலனாய்வு மற்றும் உளவு நிறுவனங்களுக்கு இந்தத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. குற்ற வழக்குகளில் விரைவான விசாரணைக்காக இந்த அமைப்பை அதிகமாகப் பயன்படுத்துவதை மத்திய உள்துறை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. இந்த தரவு தளத்தில் இருந்து சராசரியாக மாதத்திற்கு 45 ஆயிரம் தகவல்களை காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் திரட்டி வருகின்றன.
இந்நிலையில், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தரவு தளத்துடன் தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையம் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் குடிமக்களின் பெயர், பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் விவரம், திருமண நிலை, குடியிருப்பு முகவரி, கல்வி நிலை, தொழில் போன்ற 21 வகையான தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். கடந்த 2010 ஆம் ஆண்டில் தான் முதலாவது தேசிய மக்கள்தொகை பதிவேடு உருவாக்கப்பட்டது.
பின்னர், 2015 ஆம் ஆண்டில் வீடு வீடாக சென்று, இந்த தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. இதில், 119 கோடி நபர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த 119 கோடி நபர்களின் விவரங்களையும் காவல்துறையினர் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் அணுக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல்களை விசாரணை அமைப்பினர் எளிதில் பெற முடியும்,
காவல்துறையினரும், மத்திய புலனாய்வு முகமைகளும் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமலேயே ஒரு குடிமகனைப் பற்றிய அனைத்து வகையான தரவுகளையும் அணுக முடியும் என்பதால் குடிமக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. ஆனால், காவல்துறை அல்லது புலனாய்வு அமைப்புகளால் கோரப்படும் தகவலின் நோக்கம் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் அதனை கண்காணிப்பார்கள் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவல்களைக் கொண்டு, குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும், தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப் படுவோரின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்க இயலும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

