Last Updated:
தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டாக்கா திரும்பினார். ஷேக் ஹசீனா இந்தியாவில். முகமது யூனுஸ் இடைக்கால அரசு நடத்துகிறார். தேர்தலில் தேசியவாதக் கட்சி முன்னிலை.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பின் லண்டனில் இருந்து வங்கதேசம் திரும்பினார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம், வங்கதேசத்தில் மாணவர் அமைப்பு தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் கலவரங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளன.
இந்தச் சூழலில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் டாக்கா திரும்பியுள்ளார்.
மனைவி ஜுபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமா ரஹ்மான் ஆகியோருடன் வந்திறங்கிய தாரிக் ரஹ்மானை ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்றனர்.
வரவிருக்கும் தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியாத நிலையில், தாரிக் ரஹ்மானின் தேசியவாதக் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் தாரிக் ரஹ்மானின் வருகை வங்கதேச அரசியலில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய அரசியல் தலைவர்! வங்கதேசத்தில் நடக்கப்போவது என்ன?


