உடல் மேல் அணிந்திருப்பது என்னவோ கந்தலான சாக்குத்துணிதான் என்றாலும், இந்த கானா தீர்க்கதரிசி செல்வது என்னவோ பென்ஸ் காரில்தான்.
கானாவைச் சேர்ந்த எபோ நோவா என்பவர், கடவுள் என் கனவில் வந்து என்ன சொன்னார் தெரியுமா? உலகமே தண்ணிக்குள்ள மூழ்கப் போகுது. எல்லோரும் மண்ணுக்குள்ள போகப் போறீங்க. ஆண்டவரே என் கனவில் வந்து கூறினார். என இடது கையில் பைபிளை வைத்துக் கொண்டு இவர் கதைகளை அள்ளிவிட்டுள்ளார்.
பைபிள் கதையில் வரும் நவீன நோவா நான் தான். என்னைத் தான் உங்களைக் காப்பாற்ற கடவுள் நியமித்திருக்கிறார். அக்காலத்து நோவாவை போன்று தற்போது நானும் உங்களைக் காப்பாற்ற கப்பல் ஒன்றை கட்டப் போகிறேன்.
உலகம் நீருக்குள் மூழ்கியதும் இந்த கப்பலில் என்னுடன் வருபவர்கள் மட்டும் தப்பி உயிர் பிழைக்கலாம் என சிரிக்காமல் கதைகளை அளந்து விட்டிருக்கிறார் இந்த கானாவைச் சேர்ந்த தீர்க்கதரிசி எபோ நோவா.
இதைக் கேட்டு நம்பிய பலரும் தங்கள் சொத்துகளை விற்று அவருக்கு கப்பல் கட்ட பணத்தை அனுப்பி வந்துள்ளனர். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் பணம் வந்து குவியவில்லை.
தெரியாமல் ஒரு கப்பல் என்று கூறி விட்டோமே என நொந்து கொண்ட அவர், அடுத்த நாளே 8 கப்பல்களை கட்டுமாறு கடவுள் கூறியிருக்கிறார் என அறிவித்திருக்கிறார். மேலும் கப்பல் கட்டும் வேலையையும் தன்னையே பார்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருப்பதாக சொல்லியுள்ளார்.
அதன் பின் தான் பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியிருக்கிறது. அதன் பிறகு அவர் பென்ஸ் காரே வாங்கியுள்ளார்.
டிசம்பர் 25-ம் தேதி கடவுள் நாள் குறித்து விட்டார் எனக் கூறி பணம் கொடுத்தவர்களை எல்லாம் கப்பல் கட்டும் இடத்திற்கு வரவழைத்திருக்கிறார் இந்த நோவா. ஆனால் டிசம்பர் 25-ம் தேதி அந்த நாட்டில் அவர் சொன்னதுபோல் எந்த அழிவும் நடக்கவில்லை.
அதை எதிர்பார்க்காத எபோ நோவா இப்போது என்ன சொல்லி சமாளிக்கிறது எனப் புரியாமல் தவித்திருக்கிறார். பிறகு, கடவுளிடம் கடந்த மூன்று நாட்களாக தான் சோறு தண்ணியில்லாமல் பிரார்த்தனை செய்ததைக் கேட்டு அவர் மனம் இறங்கியிருக்கிறார். உலக அழிவை சற்று தள்ளிப்போட்டிருக்கிறார் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
நோவா கப்பலில் ஜாலியாக ஊர்வலம் போகலாம். உலக அழிவை கப்பலில் இருந்தபடி ரசித்துப் பார்க்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த மக்களின் நினைப்பில் இடி விழுந்தது போல் ஆனது அந்த அறிவிப்பு.
இதனால் அவரை நம்பி பணம் கொடுத்து காத்திருந்த கானா நாட்டு மக்களும் சற்று எரிச்சல் அடைந்துள்ளனர். ஆனால் உலக அழிவை சுட்டிக் காட்டி இன்னும் எத்தனை உருட்டுகளை அவிழ்த்துவிடப் போகிறாரோ என்கிற அச்சத்தில் உள்ளது அந்நாட்டு அரசு.
நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி விட்டு, பண மோசடி செய்த எபோ நோவா மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
நாடு வேறாக இருக்கலாம், மொழி வேறாக இருக்கலாம், பழக்க வழக்கங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் சாமியார் என்று வந்து விட்டால் தாங்கள் எல்லாம் பங்காளிகள் தான் என நிரூபித்துள்ளார் கானா நாட்டு போலி தீர்க்கதரிசி.
Dec 25, 2025 10:01 PM IST
“உலகமே தண்ணீரில் மூழ்கப் போகிறது..” – கல்லா கட்டிய போலி தீர்க்கதரிசி எபோ நோவா தப்பியது எப்படி?

