Last Updated:
பெங்களூருவில் மகளிர் விடுதியின் முன்பு இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஅத்துமீறலில் ஈடுபட்டு மானபங்கம் செய்த அடாவடி இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 21 வயதான பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் டெலிகாலராக பணியாற்றி வருகிறார். இவர், உல்லா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். முன்னதாக வேலை தேடும் போது, தனது சுய விவரங்களை இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், நவீன் குமார் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அதை இளம் பெண் ஏற்றுக்கொண்டதும், அவரின் நட்பு வட்டாரத்திற்குள் இளைஞர் நுழைந்துள்ளார். முதலில், குட் மார்னிங், குட் நைட் உட்பட சில எமோஜிகளை பதிவிட்டுள்ளார். மேலும், இருவரும் சில நேரங்களில் தனியாக சந்தித்து நட்பை வலுப்படுத்தியுள்ளனர். நாளடைவில் சாட்டிங் செய்வதது அதிகரித்தும், இளம்பெண்ணை நோக்கி நவீன் குமார் காதல் அம்பை எய்துள்ளார்.
ஆனால், அதை ஏற்க இளம்பெண் மறுத்துள்ளார். இருப்பினும், இளைஞர் விடாமல் லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். அதை இளம் பெண் பொருட்படுத்தாத போதும் அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் அவர் தங்கியுள்ள மகளிர் விடுதிக்கு சென்று வாசலில் காத்திருந்துள்ளார்.
அப்போது, வெளியே வந்த இளம்பெண்ணிடம், தனது காதலை ஏற்றுக் கொண்டு உடன் வருமாறு நவீன் குமார் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததும் பெண்ணை பலமாக தாக்கி, வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளார். தொடர்ந்து மூர்க்கமாக நடந்து கொண்ட நவீன் குமார், பெண்ணின் ஆடைகளை கிழித்துள்ளார். அதிர்ச்சியடைந்த இளம் பெண், அவரின் பிடியில் இருந்து விலகி விடுதிக்குள் ஓடி தப்பியுள்ளார்.
பின்னர், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய நவீன் குமாரை சுத்துப் போட்டு தூக்கியுள்ளனர். தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அண்மையில் பெங்களூருவில் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இளைஞர் ஒருவர், அத்துமீறிய சிசிடிவி காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இன்ஸ்டா நண்பர் ஒருவர், இளம் பெண்ணுக்கு லவ் டார்ச்சர் கொடுத்து அத்துமீறிய சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி பெங்களூருவில் நிகழ்வதால் பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெண்களிடம் அத்துமீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
Bangalore,Karnataka


