பி.ஆர்.ராஜன்

2025 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (ONSA) பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோர் அல்லது பயனீட்டாளர் மட்டும் அன்றி சம்பந்தப்பட்ட நிறுவனமும் பொறுப்பேற்பதை உறுதி செய்கிறது.
இந்த பொறுப்பை இனி சமூக ஊடகங்களை நடத்தும் எந்தவொரு நிறுவனமும் இச்சட்டத்தின் கீழ் இனி தட்டிக்கழிக்க முடியாது. லைசென்ஸ் பெற்ற அனைத்து சமூக ஊடக தளங்களும் சிறார் பாலியல் துன்புறுத்தல் – துஷ்பிரயோகம், அபாயகரமான தகவல்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு உடனடியாகவும் விரைந்தும் நீக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கின்றன.
இந்த நடவடிக்கைகள் துரிதமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். மேலும் இணைய தளங்கள் சிறார்களுக்கு பாதுகாப்பானவை என்பது ஆக்கப்பூர்வமாக உறுதி செய்யப்படவேண்டும்.
பெற்றோரின் அணுக்கமான கண்காணிப்பில் சிறார்களுக்கு ஜனரஞ்சமாகவும் இருப்பதை ONSA உறுதி செய்கிறது. அதேவேளையில் ONSA பிரதான பொறுப்புடைமையை தளத்தை நடத்தும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறது.
இந்த நடைமுறையானது சிறார்களுக்கு டிஜிட்டல் சூழலை இன்னும் பாதுகாப்பானதாக உருவாக்குவதற்கு உதவுகிறது. மேலும் ஒரு குடும்பம் பாதுகாப்புடனும் நம்பிக்கையுடனும் இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. இதுவே 2025 ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்தின் மிக உயரிய தாத்பரியமாக இருக்கிறது.
இச்சட்டம் இனி சிறார்களுக்கும் குடும்பத்திற்கும் மிக வலிமையான பாதுகாப்பு அரணாக திகழ்கிறது. அதுமட்டும் அன்றி வரம்பு மீறுவோரை வெறும் எச்சரிக்கையோடு விட்டுவிடாமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் உரிமைப் பெற்றிருக்கிறது.
இன்டர்நெட் பயனீட்டில் சிறார்களை பாதுகாப்பது சமூக ஊடகங்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு இனியும் ஒரு தேர்வு அல்ல, கட்டாயம் என்பதை திட்டவட்டமாக வரையறுத்திருக்கிறது.
●சீனியர் மனநல அதிகாரி கஸ்தூரி பாய் 

2025 ஆன்லைன் பாதுகாப்பு சட்டமானது (ONSA) மலேசியாவில் புவிசார் டிஜிட்டல் குடும்பத்தை பாதுகாப்பதில் உள்ள பங்களிப்பை மிக விரிவாகவும் ஆழமாகவும் வரையுறுத்திருக்கிறது என்று பதிவு பெற்ற மதியுறைஞர், சீனியர் மனநல ஆலோசனை அதிகாரி கஸ்தூரி பாய் முனுசாமி (Mejar Bersekutu (PA) Kasturi Bai Munusamy, Pegawai Psikologi Kanan, Kaunselor Berdaftar dan Perakuan Amalan (KB, PA), Pelajar PhD UM) தெரிவித்தார்.
இச்சட்டமானது அதன் பரிணாமத்தை முற்றிலும் மாற்றி இருக்கிறது. இதுநாள் வரை பெற்றோர் மீது சுமத்தப்பட்டிருந்த பொறுப்பு என்ற சுமை டிஜிட்டல் தளமே முழு பொறுப்பையும் ஏற்பதை கட்டாயமாக்கி இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ONSA கீழ் சமூக ஊடகங்களை நடத்தும் நிறுவனங்கள் டிஜிட்டல் மிரட்டல்களை இனி ஒருபோதும் கண்டும் காணாமல் இருக்க முடியாது. பொறுப்பையும்
தட்டிக்கழிக்க முடியாது.
கட்டமைப்பு பாதுகாப்பு சமூக ஊடக நிறுவனங்களின் முழு பொறுப்பாகிறது. இணைய பாதுகாப்பு என்பது இனி ஒரு தேர்வு அல்ல மாறாக கட்டாயம் என்பது மிக உறுதியாக தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் சிறார்களுக்கு இயல்பாகவே பாதுகாப்பான, ஜனரஞ்சகமான கட்டமைப்பை மிக எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் தயார் செய்ய வேண்டும்.
இன்டர்நெட்டில் தற்போது மிக அதிகமான தகவல்கள் குவிகின்றன. இது சிறார்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்பதால் இப்புதிய சட்டத்தின் கீழ் ஒரு பாதுகாப்பு வளையமாக தாய் – தந்தையரின் கண்காணிப்பில் சிறு பிள்ளைகள் இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது என்று கஸ்தூரி பாய் கூறினார்.
இந்த பாதுகாப்பு வேலி இருக்கும் பட்சத்தில் ஒரு குடும்பம் எவ்வித அச்சமும் பயமும் இன்றி இன்டர்நெட்டை மிகுந்த நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் பயன்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்கால சந்ததியினருக்கு இன்டர்நெட் மிக பாதுகாப்பான களம் என்பதை ONSA 2025 உறுதி செய்கிறது. உயர்நெறியுடன் பொறுப்பு மிகுந்த ஒரு தளமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சீனியர் மனநல ஆலோசகர் கஸ்தூரி பாய் தெரிவித்தார்.
●சிறார் பாலியல் துஷ்பிரயோக அம்சங்கள் அதிகரிப்பு
இன்டர்நெட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக அம்சங்கள் ஓர் அபாயக் கட்டத்தை எட்டிவிட்டது. இதற்கு அதிவேகத்திலும் துரிதகதியிலும் லைசென்ஸ் பெற்ற சமூக ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு ONSA 2025 அதிகாரமளிக்கிறது.
ONSA 2025 என்பது சட்டத்தைப் பற்றியது அல்ல. மாறாக நுட்ப ரீதியில் இன்டர்நெட் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை தெளிவுப்படுத்துகிறது என்பதை கஸ்தூரி பாய் சுட்டிக்காட்டினார்.
ONSA என்பது இன்டர்நெட் பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்தை கொண்டது அல்ல. சிறார்கள், குடும்பங்கள் இன்டர்நெட்டை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு வழிகாட்டுகிறது.
அபாயகரமான உள்ளடகத்தில் அதீத கவனம் செலுத்துகிறது. சைபர் பகடிவதை, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, மோசடிகள் போன்றவற்றை தடுப்பதற்கு இச்சட்டம் வகைசெய்கிறது.
கவனிப்பு கடமை, வயது சரிபார்ப்பு, பெற்றோர் கண்காணிப்பு, சட்டவிரோத உள்ளடக்கங்களை விரைந்து நீக்குதல் போன்றவற்றையும் ONSA 2025 உறுதி செய்கிறது என்று கஸ்தூரி பாய் கூறினார்.
சுருங்கச் சொன்னால் ONSA 2025 உண்மைத் தன்மை உடனான விளம்பரத் தகவல்கள் இடம்பெறும்; மோசடி விளம்பரங்கள் வெகுவாக குறையும். ஆன்லைன் கொடூரர்களிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்க முடியும். இன்டர்நெட்டை மூடுவது நோக்கம் அல்ல. மாறாக அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலியை எழுப்புவது ஆகும் என்று சீனியர் மனநல ஆலோசகர் கஸ்தூரி பாய் தெளிவுப்படித்தினார்.




