கோலாலம்பூர்:
பெர்லிஸ் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, பாஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (ADUNs) கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில், சாத் செமான் (சூபிங் சட்டமன்ற உறுப்பினர்), பக்ருல் அன்வார் இஸ்மாயில் (பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர்), மற்றும் முகமட் ரிஸுவான் ஹாஷிம் (குவார் சஞ்சி சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் அடங்குவர்.
நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் அரசியலமைப்புச் சட்டம் (2025 திருத்தம்) பிரிவு 76 மற்றும் பிரிவு 15A(1)(b)-ன் கீழ் இவர்களின் உறுப்பினர் தகுதி உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
இருப்பினும், இவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான விரிவான காரணங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.
பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் சுக்ரி ரம்லி மீது பாஸ் மற்றும் பெர்சாத்து (Bersatu) கட்சிகளைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவருக்கு வழங்கிய ஆதரவை அவர்கள் மீட்டுக்கொண்டதாகவும் கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மந்திரி பெசார் சுக்ரி ரம்லி சமீபத்தில் சீனாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தற்போது கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், பெர்லிஸ் மாநிலத்தின் 2022-ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி, இந்த நீக்கம் குறித்து மாநில சட்டமன்ற சபாநாயகருக்கு முறைப்படி அறிவிக்கப்படும் என்று ஹாடி அவாங் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஒருவேளை மந்திரி பெசார் மாற்றம் ஏற்பட்டால், அந்தப் பதவிக்குப் பொருத்தமான மூன்று பெயர்களை பெர்சத்து கட்சி ஏற்கனவே பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஸ் கட்சி இது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
ஆனால் பெர்லிஸ் மாநில பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர் டான்ஸ்ரீ ஷாஹிதான் காசிம், மந்திரி பெசாரை பதவியில் இருந்து நீக்க எந்த ஒரு திட்டமிட்ட முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்று நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




