Last Updated:
20 ஆண்டுகளுக்கு பின் உத்தவ் மற்றும் ராஜ் தாக்ரே கூட்டணி அமைத்தது மகாராஷ்டிர அரசியலை புரட்டிப் போட்டுள்ளது.
சிவசேனா கட்சி உருவாக்கிய பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ராஜ் தாக்கரே. கடந்த 2006 ஆம் ஆண்டு சிவசேனா கட்சியின் பால் தாக்ரேவின் மகன் உத்தவ் தாக்ரேவுக்கும், ராஜ் தாக்ரேவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
இதனால் சிவசேனாவை விட்டு விலகி மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியை ராஜ் தாக்ரே தொடங்கினார். கட்சிகள் பிளவுபட்டதால் இரு தரப்புக்கும் வெற்றி வாய்ப்பு மங்கியது. அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வியைத் தழுவினர்.
இதனிடையே ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின் உத்தவ் மற்றும் ராஜ் தாக்ரே அண்மையில் நடந்த மராத்தி விழாவில் ஒன்றாக தோன்றினர். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் மும்பை மாநகராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாக தாக்ரே சகோதரர்கள் அறிவித்துள்ளனர். பாஜகவை வீழ்த்த இருதரப்பும் இணைந்துள்ளன.
இது குறித்து பேசிய உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, மகாராஷ்டிர மண்ணுக்காக போராடும் அனைவருக்கும் தாக்கரே சகோதரர்கள் இணைந்தது மிகப் பெரும் நன்னாளாக அமையும் என்றார். இருப்பினும் எத்தனை இடங்களில் போட்டி, வேட்பாளர்கள் உள்ளிட்டவை குறித்து இரு தரப்பிலும் முடிவு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா அரசியலை புரட்டிப்போடும் மாபெரும் இணைவு! பாஜகவை எதிர்க்க கரம் கோத்த தாக்ரே சகோதரர்கள்


