BlueBird Block-2 செயற்கைக்கோளின் திட்டம் என்ன?
இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் BlueBird Block-2 தான்.
இதன் எடை 6100 கிலோ என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தலைமையிடமாகக்கொண்ட AST Space Mobile நிறுவனம் வடிவமைத்துள்ள BlueBird Block-2 செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்திய மதிப்பில் இந்த செயற்கைக்கோளின் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப் பெரிய வணிகத் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இது.
விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு செல்லுலார் இணைப்பை வழங்குவதன் மூலம் உலகளாவிய தகவல்தொடர்பு களத்தை பெரிதும் மாற்றியமைக்கும் திறனை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது.
எந்த கூடுதல் சாதனங்களும் (dish, antenna, special receiver) இல்லாமல், சாதாரண 4G & 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக இணைப்பு கொடுப்பதுதான் இதன் பிரதான நோக்கம்.
காடு, மலை, கடல், கிராமப்புறங்கள், பாலைவனம் போன்ற இடங்களில் மொபைல் டவர் இல்லாவிட்டாலும் இன்டர்நெட் வசதி கிடைக்கச் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

