அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தாண்டுக்குள் நாட்டை விட்டு தாமாக முன்வந்து வெளியேறினால் அவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த நபர்களுக்கு மூவாயிரம் அமெரிக்க டொலர் ஊக்கத்தொகை, விமான கட்டணம் இலவசம் மற்றும் விதிக்கப்பட்ட ஏனைய அபராதம் ரத்து செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆவணங்கள்
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக, குறித்த நபர்களை கைது செய்து விமானம் மூலம் அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தது.

இதனை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்கள், தாமாக முன்வந்து வெளியேறினால் இவ்வாறான சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அபராதத் தொகை
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு செயலியில் பதிவு செய்து இந்தாண்டு இறுதிக்குள் தாமாக முன்வந்து வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு மூவாயிரம் அமெரிக்க டொலர் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதனுடன் அவர்கள் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம்.

இதுவரை நாட்டை விட்டு வெளியேறாத காரணத்துக்காக உள்ள அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்.
இந்த பண்டிகை காலத்தில், CBP செயலி மூலம் முன்பதிவு செய்து வெளியேறுவதே சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு உள்ள சிறந்த வாய்ப்பு.
இதனை பயன்படுத்தாதவர்கள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதுடன் அவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் அமெரிக்காவுக்கு வழங்க முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

