கோத்தா கினபாலு:
மதரஸா மாணவர்கள் 13 பேரைத் தனது ஹெல்மெட்டால் தாக்கிய விவகாரத்தில், 38 வயதுடைய சமயப்பள்ளி ஆசிரியர் (உஸ்தாஸ்) ஒருவருக்கு 13 குற்றச்சாட்டுகளின் கீழ் மொத்தம் 18,200 ரிங்கிட் அபராதம் விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி நள்ளிரவு 11:55 மணி முதல் 11:58 மணி வரை, பண்டார் சியராவில் (Bandar Sierra) உள்ள ஒரு ‘கேமிங் ஸோன்’ (Gaming Zone) கடைக்கு முன்பாக இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சைபூர் ரஹ்மான் முகமட் இஸ்மாயில் (38) என்ற அந்த உஸ்தாஸ், அங்கிருந்த 14 முதல் 20 வயதுடைய 13 மாணவர்களைத் தனது ஹெல்மெட்டைப் பயன்படுத்தித் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 15-ஆம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் திசுக்களில் காயம் (Soft tissue injuries) ஏற்பட்டுள்ளதை மருத்துவப் பரிசோதனை உறுதி செய்தது.
இந்நிலையில் மாஜிஸ்ட்ரேட் ஜுல் எல்மி யூனுஸ் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
சைபூர் ரஹ்மான் தன் மீதான 13 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 1,400 ரிங்கிட் வீதம், 13 பேரைத் தாக்கியதற்காக மொத்தம் 18,200 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் தலா 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.




