தீவிரமான காற்று மாசுபாட்டால் தலைநகர் டெல்லி தொடர்ந்து அவதிப்பட்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு டெல்லி அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நகரில் உள்ள 10,000 பள்ளி வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் (Air Purifiers) பொருத்தப்பட உள்ளதாக டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தூய்மையான கல்வி சூழலை உருவாக்குவது அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினார். “எங்கள் குழந்தைகள் நன்றாகக் கல்வி கற்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தூய்மையான காற்றையும் சுவாசிக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். அதற்கான முதற்கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான டெண்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன” என்று ஆஷிஷ் சூட் கூறினார்.
மேலும், இந்த திட்டம் முதல் கட்டத்தில் மட்டும் முடிவடையாது என்றும், எதிர்காலத்தில் படிப்படியாக மொத்தம் 38,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் தற்போது 1,047 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆஷிஷ் சூட் பட்டியலிட்டுள்ளார். அதில், பள்ளிகளில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது, மின்சார வாகனக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, பல்ஸ்வா குப்பைக் கிடங்கை அகற்றும் பணியை முழுவீச்சில் முன்னெடுப்பது, மாநகராட்சிகளின் துப்புரவு அமைப்புகளை வலுப்படுத்துவது, துப்புரவுப் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன.
आज दिल्ली सचिवालय में प्रदूषण को लेकर एक महत्वपूर्ण प्रेस कॉन्फ़्रेंस को संबोधित किया।
यह सच्चाई किसी से छिपी नहीं है कि पिछली आम आदमी पार्टी सरकार ने प्रदूषण को लेकर ज़मीनी समाधान देने के बजाय केवल विज्ञापन की राजनीति पर ध्यान दिया। कभी ऑड–ईवन, कभी “गाड़ी ऑफ” जैसे दिखावटी अभियान… pic.twitter.com/FCoZaZzBNt
— Ashish Sood (@ashishsood_bjp) December 19, 2025
அதே நேரத்தில், இந்த முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சௌரப் பரத்வாஜ் சில நிபந்தனைகளுடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். “டெல்லியில் GRAP-4 கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், 10,000 காற்று சுத்திகரிப்பான்களை நியாயமான விலையில், வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.
மாசுபாட்டை கட்டுப்படுத்த, முந்தைய ஆம் ஆத்மி அரசு செயல்படுத்திய ஒற்றைப்படை – இரட்டைப்படை வாகனத் திட்டத்தையும் ஆஷிஷ் சூட் கடுமையாக விமர்சித்தார். “நாங்கள் ஐஐடி பட்டங்களை சுட்டிக்காட்டி, ஒற்றைப்படை – இரட்டைப்படை அல்லது ‘வண்டி ஆன், வண்டி ஆஃப்’ போன்ற விளம்பர அரசியலில் ஈடுபடுபவர்கள் அல்ல. அவசர நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, நீண்ட கால நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நிரந்தர தீர்வுகள் மூலமே மாசுபாடு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறோம்” என்று அவர் கூறினார்.
Air Pollution | காற்று மாசுபாட்டால் திணறும் டெல்லி…! 10,000 பள்ளி வகுப்பறைகளில் பொருத்தப்படும் காற்று சுத்திகரிப்பான்கள்…

