Courtesy: nayan
டித்வா புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட
கிராமங்களில் இலுப்பைக்கடவை மற்றும் ஆத்திமோட்டை பகுதிகளும் அடங்கும் வரலாற்றில்
என்றும் இல்லாத அளவுக்கு அந்த கிராமங்கள் முற்றும் முழுதாக நீரில்
முழ்கியதுடன் வெள்ளநீர் கிராமம் முழுவதும் சூழ்ந்து 20 அடிக்கு மேல் உயர்ந்து
காணப்பட்டதுடன் பெரும்பாலான வீடுகள் நீரில் மூழ்கி போயின.
இந்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தின் முதல்
கட்டமான 25000 ரூபா கொடுப்பனவு உட்பட அரசாங்கத்தால் கொடுக்கப்படும்
நிவாரணங்களுக்கு பதிவுகளை மேற்கொள்ள செல்கின்ற போது இலுப்பைக்கடவை கிராம சேவகர்
திட்டமிட்டு தம்மை அலைக்கழிக்கும் வேலைகளில் ஈடுபடுத்துவதுடன் பல்வேறு
இடங்களில் கடிதங்களை பெற்று வாருங்கள் என இந்த இடர்காலப்பகுதியிலும்
அலையவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாத கிராமசேவகர்
அதேநேரம் கிராம சேவகர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பெரும்பாலும் செல்லாது
வீட்டிலும் அலுவலகத்திலும் இருந்து கொண்டு மக்களை அலுவலகத்துக்கு அழைப்பதும்,
தான் பாதிப்புகளை விரும்பும் நேரத்தில் தான் பார்ப்பேன் என தெரிவிப்பதும்,மக்கள்
கிராமசேவகருக்கு அழைப்பு எடுக்கும் போது நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம்
என்னால் வர முடியாது என தெரிவிப்பதாகவும், வட்ஸ் அப் மூலம் தகவல்களை வழங்கி
விட்டு மக்களின் நிலை, நிவாரணம் தொடர்பில் அக்கறை இன்றி செயற்படுவதாகவும்
அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்

அத்துடன் குறித்த கிராம சேவகர் 25000 ரூபா கொடுப்பனவு வழங்கக்கூடிய தகுதியை உடைய
குடும்பங்கள் சிலவற்றுக்கு வேண்டும் என்று பதிவுகளை மேற்கொள்ளாது தனக்கு
சார்ந்தவர்கள் சிலருக்கு கொடுப்பனவை வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளார்
நிவாரணம் கிடைக்காதவர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பினால் பதிவுகள்
முடிவடைந்து விட்டது இனி உங்களை பதிய முடியாது என பொய் கூறுவதாகவும்,20 அடி
வெள்ளத்தில் வீடு முழ்கிய போது எடுத்த புகைப்படம் இருந்தால் மட்டும் தான்
பதிவேன் என சொல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்
முறைப்பாடு செய்தும் பலனில்லை
இவ்வாறான நிலையில் குறித்த கிராம சேவகருக்கு எதிராக மாந்தை மேற்கு பிரதேச
செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள
நிலையில் இதுவரை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறான அனர்த்த சூழ்நிலைகளில் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று
மக்களுக்கு ஒழுங்காக பணியாற்ற முடியாத இவ்வாறான கிராம சேவகர் தொடர்பில் உரிய
நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளாதவிடத்து குறித்த கிராம சேவகருக்கு எதிராக மனித
உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள்
தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

