ஜார்ஜ்டவுன் :
பினாங்கு, ஜாலான் பினாங்கில் சுமார் இரண்டு மீட்டர் சுற்றளவு கொண்ட பிரம்மாண்ட மரம் ஒன்று சாலையில் சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் லேசான காயமடைந்தனர்.
நேற்று இரவு சுமார் 7.18 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) இது குறித்துத் தகவல் கிடைத்தது.
ஜாலான் பினாங்கில் மரம் சரிந்து விழுந்தபோது, அந்த வழியாக 17 வயது சிறுவனும், 12 வயது சிறுமியும் யமஹா LC மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக மரம் அவர்கள் மீது விழுந்தது.
மரம் விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux) ரக நான்கு சக்கர வாகனமும் சேதமடைந்தது.
பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் கூறுகையில்:
மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவனுக்கும் சிறுமிக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்குச் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தின் உரிமையாளரான 64 வயது முதியவர் காயமின்றி தப்பினார்.
தீயணைப்புத் துறையினர், பினாங்கு மாநகர் மன்றம் (MBPP) மற்றும் மலேசியக் குடிமுறைத் தற்காப்புப் படை (APM) ஆகியவற்றுடன் இணைந்து சரிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 7.57 மணியளவில் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தன.
தற்போது மலேசியாவில் பருவமழை காலம் என்பதால், பலத்த காற்று மற்றும் மழையின் போது பழைய மரங்கள் உள்ள சாலைகளில் பயணிப்பதைத் தவிர்க்கவும் அல்லது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.



