Last Updated:
வங்கதேசம் மைமென்சிங் நகரில் தீபு சந்திர தாஸ் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டதாக முகம்மது யூனுஸ் அறிவித்தார்.
வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது. இரண்டு பத்திரிகை அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இந்திய தூதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்று, உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நலன் காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.


