Last Updated:
தொலை தூரத்திலேயே அதைக் கண்ட லோகோ-பைலட் ஹாரன் அடித்துள்ளார். ஹாரன் சத்தத்தை கேட்டதும் மிரண்ட யானைகள், அப்படியே தண்டவாளத்திலேயே அங்கும் இங்கும் நடந்துள்ளன.
அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலம் சாய்ரங்கில் இருந்து டெல்லி நோக்கி, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில், இரவில் 2.17 மணிக்கு அசாம் மாநிலம் ஜமுனாமுகா – கம்பூர் இடையே வந்தது. அப்போது, யானைக் கூட்டம் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. தொலை தூரத்திலேயே அதைக் கண்ட லோகோ-பைலட் ஹாரன் அடித்துள்ளார். ஹாரன் சத்தத்தை கேட்டதும் மிரண்ட யானைகள், அப்படியே தண்டவாளத்திலேயே அங்கும் இங்கும் நடந்துள்ளன.
வேறு வழியில்லாமல் லோகே-பைலட் எமர்ஜென்சி பிரேக்கை பிடித்துள்ளார். ஆனால், வேகம் காரணமாக நிற்காமல் சென்ற ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த யானைகள் மீது பலமாக மோதியுள்ளது. அடுத்தடுத்து, 8 யானைகள் மீது மோதியதால், ரயிலின் எஞ்சின் மற்றும் முதலில் உள்ள 5 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இருந்தபோதும் பயணிகள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், 5 பெட்டிகளில் இருந்த பயணிகளை மீட்டு மற்ற பெட்டிகளுக்கு மாற்றினார். தொடர்ந்து, மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி காலை 6 மணியளவில் ரயில் அங்கிருந்து கிளம்பியது. மேலும், அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டது. இதனிடையே, தண்டவாளத்தின் அருகே உயிரிழந்து கிடந்த யானைகளின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் விபத்து நிகழ்த்தது யானைகள் கடந்து செல்லும் பகுதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், வழக்கம் போல் ரயில் வேகமாக சென்று கொண்டிருந்ததால், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது மோதியுள்ளது. இந்தியாவில், கடந்த 2009 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ரயில்கள் மோதி 186 யானைகள் உயிரிழந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதில், அசாம் மாநிலத்தில் மட்டும் 62 யானைகள் உயிரிழந்துள்ளன. இதனால், யானைகள் உயிரிழப்பதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் ரயில்கள் மெதுவாக இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அசாமில் 8 யானைகள் வழித்தடம் மாறி தண்டவாளத்தை கடக்க முயன்றதால் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இதுபோன்ற விபத்துகளை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


