Last Updated:
ரத்தம் செலுத்துவதன் மூலம் HIV தொற்று என்பது நிச்சயமாக ஒரு விபத்தாக இருக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டாக்டர் விக்ராந்த் பூரியா NDTVயிடம் கூறியுள்ளார்.
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சாதாரண உயிர் காக்கும் சிகிச்சை தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தின் மிக மோசமான பொது சுகாதார தோல்வியாக உருவெடுத்துள்ளது.
சத்னா அரசு மையங்களில் இந்த குழந்தைகளுக்கு ரத்தம் வழங்கப்பட்டபோது HIV பாதிப்புக்கு உள்ளான ரத்தம் செலுத்தப்பட்டு இருப்பது NDTV விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது அதிகாரிகளின் அலட்சியத்தைக் காட்டுவதோடு, இரத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஏற்பட்டுள்ள ஆழமான சீர்குலைவையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த குழந்தைகளுக்கு மூன்று வெவ்வேறு ரத்த வங்கிகளில் இருந்து பெறப்பட்ட 189 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த செயல்முறையில் 150க்கும் மேற்பட்ட டோனர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாவட்ட அளவில் நடைபெற்ற விசாரணையில் டோனர் ரத்தம் மூலமாகவே இந்த குழந்தைகளுக்கு HIV தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஒரு ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் இரண்டு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சத்னா மாவட்ட மருத்துவமனையின் முன்னாள் சிவில் அறுவை சிகிச்சை நிபுணருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோஜ் சுக்லா இதற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் கொடுத்த விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் CEO, IAS அதிகாரியுமான டாக்டர் யோகேஷ் பார்சத் அவர்களின் தலைமையில் 7 நபர்கள் கொண்ட குழுவின் கீழ் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் நோயியல் நிபுணர் மற்றும் ரத்த வங்கி பொறுப்பாளரான டாக்டர் தேவேந்திர பாட்டேல் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுனர்களான ராம் பாய் திரிபாதி மற்றும் நந்தலால் பாண்டே ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதன்முதலாக மார்ச் 20ஆம் தேதி அன்று 15 வயது தலசீமியா நோயாளிக்கு HIV இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பிறகு மார்ச் 26 முதல் 28க்கு இடையில் மேலும் இரண்டு குழந்தைகளும் HIV ஆல் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 3ஆம் தேதியன்று 4வது வழக்கு உருவெடுத்தது. அதிர்ச்சியூட்டும் விதமாக இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அரசு நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு எதுவும் நடக்காததுபோல் அமைதியாக இருந்துள்ளனர்.
ரத்தம் செலுத்துவதன் மூலம் HIV தொற்று என்பது நிச்சயமாக ஒரு விபத்தாக இருக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டாக்டர் விக்ராந்த் பூரியா NDTVயிடம் கூறியுள்ளார். இதில் ரத்த பரிசோதனை தோல்வி அடைந்துள்ளது, சோதனை நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன மற்றும் கண்காணிப்பு அமைப்பு சீர்குலைந்தது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் 70,000க்கும் மேற்பட்ட HIV நோயாளிகள் உள்ளனர். இதில் பரவல் விகிதம் 0.10 சதவீதமாகவும், போதைப்பொருள் ஊசி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் 4.20% ஆகவும் உள்ளது. இதில் 7 மாவட்டங்கள் அதிக அபாயம் நிறைந்தவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


