எக்ஸ் சமூக வலைதளத்தில் இது குறித்து தொடர்ச்சியான பதிவுகளை வெளியிட்ட, இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், பெய்ஜிங் எவ்வாறு காற்றுத் தரத்தை கணிசமாக மேம்படுத்தியது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். “வேகமான நகரமயமாக்கல் காரணமாக காற்று மாசுபாட்டுடன் சீனாவும், இந்தியாவும் போராட வேண்டியிருந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் சீனா எடுத்த தொடர்ச்சியான மற்றும் கடுமையான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யூ ஜிங் பகிர்ந்த தரவுகளின்படி, 2013ஆம் ஆண்டில் பெய்ஜிங்கின் ஆண்டு சராசரி PM2.5 அளவு 101.7 மைக்ரோகிராம்/க்யூபிக் மீட்டராக இருந்தது. 2024ஆம் ஆண்டில் அது 30.9 மைக்ரோகிராம்/க்யூபிக் மீட்டராகக் குறைந்துள்ளது. இந்த மாற்றம் ஒரே இரவில் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை, பல துறைகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் விளைவாகவே இது ஏற்பட்டதாக அவர் கூறினார்.
பெய்ஜிங் எடுத்த முதல் முக்கிய நடவடிக்கை, வாகன மாசைக் கட்டுப்படுத்துவதாக இருந்தது. சீனா, யூரோ-6க்கு இணையான “சீனா 6” (China 6) என்கிற மிகக் கடுமையான புகை உமிழ்வு விதிமுறைகளை அமல்படுத்தியது. அதிக உமிழ்வைக் கொண்ட பழைய வாகனங்கள் படிப்படியாக சாலைகளில் இருந்து அகற்றப்பட்டன.
மேலும், தனியார் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வாகன பதிவு எண் குலுக்கல் முறை, ஒற்றை-இரட்டை (odd-even) ஓட்டுநர் விதிகள் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், உலகின் மிகப்பெரிய மெட்ரோ மற்றும் பேருந்து வலையமைப்புகளில் ஒன்றை உருவாக்கி, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் ஊக்குவித்தது. மின்சார வாகனங்களுக்கான மாற்றமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. பெய்ஜிங்-தியான்ஜின்-ஹெபே பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த உமிழ்வு குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இப்படி, “தூய்மையான காற்று ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை, ஆனால் அது சாத்தியமானதே” என்று யூ ஜிங் வலியுறுத்தினார்.
வாகனங்கள் மட்டுமல்லாமல், தொழில்துறையிலிருந்து வெளியேறும் மாசைக் கட்டுப்படுத்த சீனா பெரிய அளவிலான மறுசீரமைப்பை மேற்கொண்டது. பெய்ஜிங்கில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட கனரகத் தொழில்கள் மூடப்பட்டன அல்லது நகருக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டன.
சீனாவின் மிகப்பெரிய எஃகு நிறுவனங்களில் ஒன்றான ஷோகாங் (Shougang) இடமாற்றம் செய்யப்பட்டதன் மூலம் மட்டும், உள்ளிழுக்கக்கூடிய துகள்களின் அளவு சுமார் 20% குறைந்தது. காலியாகிய தொழிற்சாலை வளாகங்கள், பூங்காக்கள், வணிக மண்டலங்கள், கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட்டன. முன்னாள் ஷோகாங் தளம் 2022 குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், மொத்த விற்பனை சந்தைகள், தளவாட மையங்கள், சில கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை நகருக்கு வெளியே மாற்றுவதன் மூலம் தலைநகருக்குத் தேவையற்ற செயல்பாடுகள் குறைக்கப்பட்டன. பொதுவான உற்பத்தித் தொழில்கள் ஹெபேக்கு மாற்றப்பட்டாலும், உயர் மதிப்புள்ள ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் சேவைத் துறைகள் பெய்ஜிங்கிலேயே தக்கவைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் புதிதானவை அல்ல. தூய்மையான எரிபொருள், வலுவான பொதுப் போக்குவரத்து, தனியார் வாகன வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல் போன்றவை குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் வேறுபாடு, செயல்படுத்தப்பட்ட அளவிலும், தீவிரத்திலும் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (CSE) நிர்வாக இயக்குநரான அனுமிதா ராய் சௌத்ரி கூறுகையில், “சீனாவில் பெய்ஜிங் மட்டுமல்ல, 26 நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது ஒரு பிராந்தியப் பிரச்சனையாகவே கையாளப்பட்டது. நடவடிக்கைகள் அவசரமானவை, கடுமையானவை மற்றும் பெரிய அளவில் இருந்தன. டெல்லி-என்சிஆர் திட்டங்களில் ஒற்றுமைகள் இருந்தாலும், அந்த அளவு தீவிரம் இல்லை” என்றார். டெல்லியில் காற்று அவசரநிலை ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது போதாது. அவை தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
என்விரோகேடலிஸ்ட் சிந்தனைக் குழுவின் நிறுவனரான சுனில் தஹியா கூறுகையில், “இந்தியாவில் ஏற்கனவே யூரோ-6க்கு இணையான பிஎஸ்-6 விதிமுறைகள் உள்ளன. டெல்லியில் பிஎஸ்-6 அல்லது அதற்கு குறைவான வாகனங்களை அனுமதிக்காத சமீபத்திய முடிவு, சரியான திசையில் இந்தியா செல்வதற்கான ஒரு முக்கிய அடியாக இருக்கலாம். ஆனால், அரசியல் ஆதரவு மற்றும் தொடர்ச்சியான அமலாக்கம் இல்லாததால், பல நடவடிக்கைகள் செயல்திறன் இழந்தன” என்கிறார்.
தொழில்துறை மாசு தொடர்பாக, அனைத்து தொழில்களையும் இடமாற்றம் செய்வது நடைமுறையில் சிரமம் என்றாலும், பொதுவான மாசுக் கட்டுப்பாட்டு வசதிகள், உமிழ்வு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் தொழில்துறை சொத்துக்களை மறுசீரமைத்தல் போன்ற தீர்வுகள் செயல்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார். 2019-க்குப் பிறகு மின் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மொத்தத்தில், சீனா மேற்கொண்ட ஒருங்கிணைந்த, நீண்டகால மற்றும் கடுமையான அணுகுமுறை, டெல்லி உள்ளிட்ட இந்திய நகரங்களுக்கு காற்று மாசுபாட்டைக் கையாள்வதில் முக்கியமான பாடங்களை வழங்குகிறது.
இதையெல்லாம் செஞ்சா போதும்… காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்திடலாம்…! இந்தியாவுக்கு சீனாவின் அட்வைஸ்…

