Last Updated:
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய யாசிர் அகமது தார் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி பயங்கரவாத கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்தத் தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலரும் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தீவிரவாத தாக்குதல் வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இந்தத் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையதாக ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழக வளாகத்திலும், பிற இடங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளிகளான டாக்டர் முசம்மில் ஷகீல் கனி மற்றும் டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தத் தீவிரவாத தாக்குதலில் இதுவரை என்.ஐ.ஏ. எட்டு பேரை கைது செய்திருந்த நிலையில், இன்று ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஸ்ரீநகரைச் சேர்ந்த யாசிர் அகமது தார் என்பவரை ஒன்பதாவது நபராக கைது செய்துள்ளது.
இது குறித்து என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில், “நவம்பர் 10 ஆம் தேதி தேசிய தலைநகரை உலுக்கிய கார் குண்டுவெடிப்புக்குப் பின்னால் உள்ள சதியில் யாசிரின் தீவிர பங்கை NIA விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. என்.ஐ.ஏ. விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்ற நபர்களுடன் யாசிர் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக கார் வெடிகுண்டு வெடிப்பில் முக்கிய நபரும், இறந்தவருமான உமர் உன் நபி மற்றும் முஃப்தி இர்பான் ஆகியோருடன் யாசிர் அகமது தார் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
December 18, 2025 6:02 PM IST


