பல தசாப்தங்களாக வளைகுடா நாடுகளில் வெளிநாட்டவர்களின் குடியிருப்பு என்பது தற்காலிகமான ஒன்றாகவே இருந்து வந்தது. வேலை செய்யவும், முதலீடு செய்யவும் வாய்ப்புகள் இருந்தாலும், நிரந்தரமாக அங்கு குடியேறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலைமையில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் சார்ந்த வளர்ச்சியின் எல்லைகளை உணர்ந்த யுஏஇ மற்றும் சவூதி அரேபியா, நீண்ட கால குடியிருப்பை, பொருளாதார உத்தியாக மாற்றத் தொடங்கியுள்ளன.
இந்த மாற்றத்தின் பிரதான அடையாளங்களாக, யுஏஇ கோல்டன் விசா மற்றும் சவூதி அரேபியாவின் பிரீமியம் குடியிருப்பு அனுமதி (Saudi Premium Residency) திட்டங்கள் விளங்குகின்றன. 2019-ல் ஒரே ஆண்டில் அறிமுகமான இந்த இரண்டு திட்டங்களும் உலகளாவிய திறமைகள், முதலீடுகள் மற்றும் நீண்ட கால பொருளாதார பங்களிப்பை ஈர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், செயல்படுத்தும் தத்துவம் மற்றும் நடைமுறைகளில் இரண்டும் முற்றிலும் வேறுபட்ட பாதைகளை பின்பற்றுகின்றன.
இந்த திட்டங்கள் அறிமுகமானது ஏன்?
2018ஆம் ஆண்டுக்குள், யுஏஇ நிதி, தொழில்நுட்பம், சுகாதாரம், தளவாடங்கள், ஊடகம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் உலகளாவிய மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தது. ஆனால், அந்த வளர்ச்சியின் அடித்தளமாக இருந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கான குறுகிய கால விசாக்களால் கட்டுப்படுத்தப்பட்ட தற்காலிக குடியிருப்பாளர்களாகவே இருந்தனர். இந்த அமைப்பு, நாட்டின் நீண்டகால வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியது.
இந்த சூழலில்தான், 2019ஆம் ஆண்டு அறிமுகமான கோல்டன் விசா திட்டம், முதலீட்டாளர்களை மையமாகக் கொண்டு முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால், 2021-க்குப் பிறகு, அதன் நோக்கமும், பரப்பளவும் குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்தது. இன்று இந்தத் திட்டம், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள், கலைஞர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள், சிறந்த மாணவர்கள் மற்றும் சமூக சேவை மற்றும் நிவாரணப் பணியாளர்கள் வரை பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்குகிறது.
இந்த மாற்றம், யுஏஇ-ன் பண முதலீட்டை மட்டுமே முன்னிறுத்தும் பொருளாதாரக் கட்டமைப்பிலிருந்து விலகி, அறிவு, திறமை மற்றும் சமூக-பொருளாதார பங்களிப்பை மதிக்கும் ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கில் நகர்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
சவூதி அரேபியாவின் பிரீமியம் குடியிருப்பு திட்டம், விஷன் 2030 சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 2019-ல் அறிமுகமானது. இது, பாரம்பரிய “ஸ்பான்சர்” முறையை அகற்றி, தகுதியுள்ள வெளிநாட்டவர்கள் இங்கு வாழவும், வேலை செய்யவும், சொத்துகளை வைத்திருக்கவும் அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
பின்னர், 2024-ல் இந்தத் திட்டம் கணிசமான அளவில் மேலும் விரிவாக்கப்பட்டது. தற்போது, அசாதாரண திறமை, அங்கீகரிக்கப்பட்ட திறமை, முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏழு தகுதி வகைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. யுஏஇ கோல்டன் விசாவுடன் ஒப்பிடுகையில், சவூதி திட்டம் தகுதி வரம்பில் குறுகியதாக இருந்தாலும், வாழ்நாள் அல்லது நீண்டகால நிரந்தர குடியிருப்பு வழங்குவதில் அதிக உறுதி கொண்டதாக உள்ளது.
தகுதி:
2025 நிலவரப்படி, யுஏஇ கோல்டன் விசா 12-க்கும் மேற்பட்ட தகுதி வகைகளைக் கொண்டுள்ளது. பல வழிகளில் முதலீடு கட்டாயமில்லை.
- 2 மில்லியன் திர்ஹாம் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் முதலீடு
- குறைந்தபட்ச மூலதனத்துடன் ஸ்டார்ட்அப்
- உயர்தர சம்பளமுள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள்
- கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்கள்
- சிறந்த மாணவர்கள்
இந்த விரிவான தகுதி அமைப்பு, யுஏஇ-ஐ அதிகமான தொழில் வல்லுநர்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது.
சவூதி திட்டமானது நிதிரீதியாக தெளிவானது:
- நிரந்தர குடியிருப்பு: ஒருமுறை SAR 800,000
- வருடாந்திர குடியிருப்பு: ஆண்டுக்கு SAR 100,000
இந்த திட்டத்தில் வருமானம், சொத்துகள் மற்றும் பின்னணி குறித்த சரிபார்ப்புகள் கடுமையாக நடைமுறையில் உள்ளன. ஆனால் அதற்கேற்றாற்போல், விண்ணப்பதாரர்களுக்கு வாழ்நாள் குடியிருப்பு நிலையும், விரிவான உரிமைகளும் வழங்கப்படுகின்றன.
இரு நாடுகளிலும் தனிநபர் வருமான வரி இல்லை என்றாலும், வணிகம் மற்றும் நிறுவன வரி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.
- யுஏஇ-ல், குறிப்பிட்ட வரம்பைத் தாண்டும் நிறுவன லாபங்களுக்கு, 9% நிறுவன வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், பல சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலம் வரி விலக்குகள் வழங்கப்படுகின்றன, மதிப்புக்கூட்டு வரி (VAT) 5%ஆக உள்ளது.
- இதற்கு மாறாக, சவூதி அரேபியாவில் VAT 15%ஆக இருப்பினும், விஷன் 2030-க்கு ஏற்றாற்போல் செயல்படும் துறைகளுக்கு வலுவான வரி மற்றும் முதலீட்டு ஊக்கங்கள் வழங்கப்படுகின்றன.
வாழ்க்கை முறையை பொறுத்தவரையில், யுஏஇ அதிக பன்முக கலாச்சாரம், உலகத் தர பள்ளிகள் மற்றும் எளிதான சர்வதேச இணைப்பை வழங்குகிறது. சவூதி அரேபியாவில், வீட்டு வசதி மலிவாகவும், நகரத்திற்கு நகரம் வாழ்க்கை முறை மாறுபடும் வகையிலும் உள்ளது.
நெகிழ்வுத்தன்மை, உலகளாவிய இயக்கம் மற்றும் சர்வதேச வணிகம் முக்கியமானவர்களுக்கு, யுஏஇ கோல்டன் விசா சிறந்த தேர்வாகும்.
நிரந்தர குடியேற்றம், நீண்ட கால உறுதி மற்றும் நாட்டிற்குள் ஆழமான ஈடுபாட்டை விரும்புபவர்களுக்கு சவூதி அரேபியாவின் பிரீமியம் குடியிருப்பு அனுமதி பொருத்தமானது.
இந்த இரண்டு திட்டங்களுமே, வளைகுடா நாடுகள் இனி தற்காலிக வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி இருக்காமல், நீண்ட கால குடியேற்றமும், நிலையான குடியிருப்பும் கொண்ட புதிய கட்டத்திற்குள் நுழைந்துவிட்டன என்பதைக் காட்டுகின்றன.
December 18, 2025 5:13 PM IST
யுஏஇ கோல்டன் விசா Vs சவுதி பிரீமியம் குடியிருப்பு… நீண்ட கால எதிர்காலத்திற்கு எந்த வளைகுடா நாடு சிறந்தது…?

