Last Updated:
மக்களவையில் விபி ஜி ராம் ஜி மசோதா கடும் அமளியில் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான புதிய சட்ட மசோதா, மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான விபி ஜி ராம் ஜி எனப்படும், வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கப்படுவதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில், மல்லிகார்ஜுன கார்கே, டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் மசோதா மீது அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பதில் அளித்தபோது, எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று முழக்கமிட்டதால் கடும் அமளி நிலவியது.
அமைச்சருக்கு எதிரே மசோதா நகலை கிழித்து வீசி, எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். தொடர்ந்து கடும் அமளிக்கு மத்தியில் விபி ஜி ராம் ஜி மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
December 18, 2025 5:02 PM IST


