Last Updated:
இன்று முதல் டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்று மாசுபாட்டால் டெல்லி நகரம் திணறி வருகிறது. அங்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுவால் மூச்சு திணறி வருகிறது நாட்டின் தலைநகரம்… ஆண்டுதோறும் குளிர்காலங்களில் இதே பிரச்சினையை எதிர்கொள்ளும் டெல்லி மக்கள், இந்த முறை நொந்து போயிருக்கிறார்கள். காற்றின் தரக்குறியீடு 400-ஐ கடந்து மிக மோசமான நிலையை அடைந்திருப்பதால், கடும் கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். அதேநேரம் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கு தனித்தனி நேரக்கட்டுபாடுகளை அமல்படுத்தி, ஒரே நேரத்தில் அனைவரும் அலுவலகம் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், தீயணைப்புத் துறை, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இந்த நடவடிக்கை பொருந்தாது. கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பதிவு செய்யப்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை முழுமையாக பள்ளிகள் ஆன்லைன் வழியில் இயங்கவும், 6 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹைபிரிட் வகையில் வகுப்புகளை நடத்தவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. காற்றுமாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிஎஸ்-4 தரநிலைக்கு முந்தைய பழைய வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி அரசுக்கு அனுமதி அளித்தது.
டெல்லி எல்லைப்பகுதி சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் வாகனங்கள் காத்திருப்பதை தடுக்க, டெல்லியைச் சுற்றியுள்ள 9 சுங்கச்சாவடிகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநகராட்சிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மாசு கட்டுப்பாட்டு வழிமுறைகள் ஏற்கெனவே இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் சுணக்கம் நிலவுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
காற்றுமாசை தடுப்பது குறித்து டெல்லி அரசு, மாநகராட்சி, காற்று தர மேலாண்மை ஆணையம் பதிலளிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை காற்று மாசு வழக்கு விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
December 18, 2025 6:53 AM IST


