பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி வெல்வதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 10,000 தொகை, தவறுதலாக பல ஆண்களுக்கும் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக, ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும், தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என்று தெரிவித்திருந்தாலும், மகாகத்பந்தன் கூட்டணி வெற்றிக்கு அருகே வரும் என்றும், நெருக்கடியை தரும் என்றும் தெரிவித்திருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த முடிவுகள் பின்னால் பல காரணிகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்களும், ஆர்வலர்களும் தெரிவித்திருந்தாலும், பெரும்பாலோனோர், தேர்தலுக்கு முன்பாக ‘முதலமைச்சர் மகிளா ரோஜ்கார் யோஜனா’ எனும் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 1.54 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 வழங்கியதை முக்கிய காரணமாக தெரிவித்திருந்தனர்.
‘முதலமைச்சர் மகிளா ரோஜ்கார் யோஜனா’ திட்டத்தின் கீழ் பிகார் மாநிலத்தில் உள்ள பெண்கள் சுயத்தொழில் தொடங்க ரூ. 2,00,000 வரை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, அதன் முன் தொகையாக பெண்களுக்கு ரூ. 10,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால், பெண்களின் வாக்கு அதிகளவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குச் சென்றது என சொல்லப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தில் பெரும் குளறுபடி நடந்திருப்பது தற்போது வெளியாகியுள்ளது. பெண்களுக்காக தொடங்கப்பட்டு, பெண்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்ட இந்த ரூ. 10,000 பல ஆண்களுக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆண்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ. 10,000 சென்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அது கண்டறியப்பட்டுள்ள சூழலில், அவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப வாங்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை அப்படி பணம் தவறுதலாக அனுப்பப்பட்ட 14 நபர்களுக்கு, பணத்தை திரும்ப அளிக்கும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், பணம் திரும்பி அனுப்பிய பின், திருப்பிச் செலுத்தியதற்கான ஆதாரத்தை, ஸ்கிரீன்ஷாட் அல்லது ரசீதை, தொகுதி திட்ட அமலாக்க அலகு (BPIU) அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதேசமயம், பலரும் அந்தத் தொகையை செலவழித்துவிட்டதாகவும், அதனால், திரும்பி வழங்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர். நாகேந்திர ராம் எனும் நபர், “பணம் தவறுதலாக அனுப்பப்பட்டது என்றால் ஏன் உடனடியாக எங்களுக்கு அரசு தெரிவிக்கவில்லை. ஏன் மூன்று மாதங்கள் கழித்து நோட்டீஸ் வழங்குகிறார்கள்? நாங்கள் வாக்குச் செலுத்தி அவர்கள் வென்றுள்ளனர். தற்போது அவர்களுக்கு பணம் திரும்ப வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
December 17, 2025 6:29 PM IST
பீகார் தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ரூ. 10,000… தவறுதலாக வழங்கப்பட்ட ஆண்களிடம் திரும்பி கேட்கும் அரசு!

