Last Updated:
சிங்கம், யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களை மெஸ்ஸி பார்வையிட்டார். விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுகளும் அளித்தார்.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார்.
அர்ஜெண்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது ‘GOAT டூர்’ பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தார். அந்த வகையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அனந்த் அம்பானியின் வனவிலங்குகள் மறுவாழ்வு மையமான வந்தாராவிற்கு மெஸ்ஸி வருகை தந்தார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரம்பரிய இசை, மலர் மாலைகள், ஆரத்தி, மற்றும் பாரம்பரிய உடைகளுடன் மெஸ்ஸிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மெஸ்ஸியுடன் இன்டர் மியாமி அணி வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
சிங்கம், யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள், காண்டாமிருகங்கள் போன்ற விலங்குகளின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களை மெஸ்ஸி பார்வையிட்டார். விலங்குகளைப் பார்வையிட்ட மெஸ்ஸி அவற்றுக்கு உணவுகளும் அளித்தார். லியோனல் மெஸ்ஸியைச் சிறப்பிக்கும் விதமாக இம்மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டது.
முன்னதாக, மெஸ்ஸி வந்தாராவில் நடைபெற்ற பாரம்பரிய இந்து சடங்குகளில் பங்கேற்றார். அங்குள்ள கோவிலில் நடைபெற்ற அம்பே மாதா பூஜை, கணேஷ் பூஜை, ஹனுமான் பூஜை மற்றும் சிவ அபிஷேகம் ஆகியவற்றிலும் மெஸ்ஸி கலந்துகொண்டார். அவரை வந்தாரா நிர்வாகம் நாட்டுப்புற இசையுடனும் மலர் தூவியும் வரவேற்றது. வந்தாராவில் மணிக்லால் என்ற குட்டி யானையுடன் நீண்ட நேரம் செலவழித்து கவனம் ஈர்த்தது.
தொடர்ந்து பேசிய மெஸ்ஸி, “வந்தாரா செய்வது உண்மையிலேயே அழகானது. விலங்குகளுக்கான பணி, அவை பெறும் பராமரிப்பு, அவை மீட்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் விதம் ஆகியவை மிகவும் ஈர்க்கக்கூடியவை. நாங்கள் இங்கே ஒரு அற்புதமான நேரத்தைச் செலவிட்டோம். எங்களின் பயணம் முழுவதும் மிகவும் நிம்மதியாக உணர்ந்தோம். இது எங்கள் மனதில் நீங்காத ஒரு அனுபவமாக இருக்கும். இந்த அர்த்தமுள்ள பணிக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கவும் ஆதரவளிக்கவும் நாங்கள் நிச்சயமாக மீண்டும் இங்கே வருவோம்” என்றார்.
December 17, 2025 7:19 AM IST


