
பி.கேதீஸ்
மண்சரிவு அபாயம் காரணமாக, தலவாக்கலை வட்டகொட யொக்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (16) முதல் தற்காலிகமாக வேறொரு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன.
பாடசாலைக்கு மேலே உள்ள மலையின் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து பாடசாலை கட்டிடங்களில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக அருகிலுள்ள வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு மாற்றியுள்ளனர்.
யொக்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயம் ஓர் ஆரம்ப பாடசாலையாகும்.இங்கு கல்வி கற்கும் 49 மாணவர்களும் கல்வி கற்பிக்கும் ஆறு ஆசிரியர்களும் தற்போது வட்டகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் யொக்ஸ்போர்ட் பாடசாலையில் கல்வி கற்கும் இளம் மாணவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி உள்ளதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நுவரெலியா கல்வி வலயத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.கணேஷ் ராஜிடம் கேட்டபோது, பாடசாலை மைதானத்தில் பாடசாலைக்கு மேலே உள்ள மலையில் மண்சரிவு அச்சுறுத்தல் இருப்பதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வட்டகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் இணைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

