கோலாலம்பூர்:
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், தற்போது மனித வள அமைச்சராக முழு அமைச்சர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சற்று முன் அறிவித்த அமைச்சரவைக் மாற்றத்தின் போது, டத்தோஶ்ரீ ரமணனுக்கு இந்த முக்கியமான அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் துணை அமைச்சர் நிலையிலிருந்து உயர்ந்து, முழு அமைச்சர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
இதுவரை மனித வள அமைச்சராகப் பொறுப்பில் இருந்த ஸ்டீவன் சிம், புதிய அமைச்சரவையில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்புகளைப் பெற்ற அனைத்து அமைச்சர்களும் நாளை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என பிரதமர் தெரிவித்தார்.
மனித வள அமைச்சு இதற்கு முன் இந்திய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களால் பொறுப்பேற்கப்பட்ட அமைச்சாகவும் திகழ்கிறது. அந்த வகையில் துன் வி.தி. சம்பந்தன், டான்ஸ்ரீ சுப்பிரமணியம், டத்தோஸ்ரீ எம். சரவணன், எம். குலசேகரன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் கடந்த காலங்களில் மனித வள அமைச்சராகப் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறையின் துணை அமைச்சராக இருந்த டத்தோஶ்ரீ ரமணன், தற்போது நாட்டின் மனித வள அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதால், தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் புதிய முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.




