Last Updated:
பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை புதுப்பித்துள்ளன.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு, ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆகக் குறைக்க ஒருமனதாக ஒப்புக்கொண்டது. இதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் (டிசம்பர் 5, 2025) இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்-ஐ குறைத்த பிறகு, அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கியானது அதன் ரெப்போ லிங்க்ட் லென்டிங் ரேட்டை (RLLR – Repo Linked Lending Rate) திருத்தியமைத்துள்ளது.
டிசம்பர் MPC-யில் ரெப்போ ரேட்டை 25bps குறைத்து 5.50 சதவீதத்திலிருந்து 5.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த டிசம்பர் 6, 2025 முதல் அதன் RLLR-ஐ 8.35%-லிருந்து (10 bps BSP உட்பட) 8.10%-ஆக (10 bps BSP உட்பட) குறைத்துள்ளது. இதனிடையே அதன் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் ரேட் (MCLR) மற்றும் பேஸ் ரேட் மாறாமல் உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது. RLLR-இணைக்கப்பட்ட கடன்கள் நேரடியாக ரெப்போ விகிதத்துடன் ஒப்பிடப்படுகின்றன. இதன் பொருள் என்னவென்றால் ரிசர்வ் வங்கி அதன் கொள்கை விகிதத்தை (policy rate) எப்போதெல்லாம் மாற்றுகிறதோ, அப்போதெல்லாம் வங்கிகள் இந்த விகிதங்களை அதற்கேற்ப சரிசெய்ய வேண்டும்.
இந்த நிலையில், பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை புதுப்பித்துள்ளன. இந்தியன் வங்கி அதன் ரெப்போ லிங்க்ட் பெஞ்ச்மார்க் லென்டிங் ரேட்டை 8.20%-லிருந்து 7.95%-ஆக குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட கடன் வட்டி விகிதங்கள் டிசம்பர் 6 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் RLLR குறைப்பு காரணமாக இந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி இருப்போர் மாதமாதம் கட்டி வரும் EMI தொகை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் இந்த வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், உங்கள் வீட்டுக் கடனானது RLLR-இணைக்கப்பட்டது என்றால் இந்த வட்டி விகித குறைப்பு பொதுவாக வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட அடுத்த வட்டி விகித மறுசீரமைப்பு தேதியில் உங்கள் EMI அல்லது கடன் காலத்தில் எதிரொலிக்கும்.
அதே நேரம் உங்கள் கடனானது MCLR அல்லது பேஸ் ரேட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் EMI தற்போதைக்கு மாறாது, ஏனெனில் பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த இரண்டிற்கான வட்டி விகிதங்களை தற்போதைக்கு மாற்றாமல் அப்படியே வைத்திருக்கிறது. எனினும் புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு, வட்டியானது திருத்தப்பட்ட விகிதமான 8.10%-ல் என்ற அளவிலேயே வசூலிக்கப்படும், இதனால் கடன் சுமை சற்று குறைவாக இருக்கும்.
December 16, 2025 2:11 PM IST
ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி.. வீட்டு கடன் விகிதத்தை குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி.. EMI குறையுமா?


