Last Updated:
10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு தப்பி வந்த 43 வயதான அகமது, சிட்னியில் உள்ள சுதர்லாந்து ஷீர் பகுதியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் வித்தியாசமான ஆடைகளை அணிந்திருப்பதில்லை, நம்மை போல சாதாரண ஆடைகள் அணிந்து நம்முடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் தான் ஆஸ்திரேலிய துப்பாக்கி சூட்டில் தன் உயிரை பணயம் வைத்து மற்றவர்கள் உயிரை காப்பாற்றிய அந்த நபர். போர் பதற்றம் நிறைந்த சிரியாவில் பிறந்து எந்த விதமான ஆயுத பயிற்சி இல்லாமல் தனி ஒருவராக பல உயிர்களை காப்பாற்றி ஆஸ்திரேலியாவின் ரியல் ஹிரோவாக மாறி உள்ளவர் தான் அகமது அல் அகமது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையின் அருகே ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில், அங்கு தனது உறவினருடன் தேநீர் கடைக்கு வந்திருந்தவர் தான் அகமது அல் அகமது. அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது, அனைவரது உயிருக்கும் ஆபத்து… என்பதை உணர்ந்த அகமது, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம்..
ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. சற்றும் யோசிக்காமல், நான் உயிரிழந்துவிடுவேன், எனது குடும்பத்தினரிடம் நான் பலரின் உயிரை காக்கச் சென்று தான் மரணித்தேன் என சொல்லிவிடு என உறவினரிடம் கூறிவிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தடுக்கச் சென்றார். போர்ப் பதற்றங்கள் நிறைந்த சிரியாவில் பிறந்தவர் அகமது அல் அகமது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு தப்பி வந்த 43 வயதான அகமது, சிட்னியில் உள்ள சுதர்லாந்து ஷீர் பகுதியில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் சிறிய பழக்கடை ஒன்றை அகமது வைத்துள்ளார். கையில் எந்த ஆயுதங்களும் இல்லாத போதும் தைரியாக சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியவரை தடுத்த அகமது தற்போது 2 குண்டுக் காயங்களுடன் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகமது அல் அகமதுவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டி உள்ளார். துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அகமது தடுக்காமல் இருந்திருந்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என சிட்னி நகர காவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய மக்கள் மட்டுமின்றி அனைவரும் அகமதுவை ரியல் ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.
December 15, 2025 3:49 PM IST
“பலரின் உயிரை காக்கச் சென்று தான் மரணித்தேன் என சொல்லிவிடு” சிரியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் ரியல் ஹிரோவாக மாறிய அல் அகமது


