கோல்கத்தா:
உலகப் புகழ் பெற்ற அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, இந்தியாவுக்கு மேற்கொண்ட நான்கு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை (டிசம்பர் 13) கோல்கத்தாவின் புகழ்பெற்ற ‘சால்ட் லேக்’ விளையாட்டரங்கில் ரசிகர்கள் மத்தியில் காட்சியளித்தார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்த நிலையில், அவர் அரங்கில் இருந்த குறைந்த நேரத்தால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.


மெஸ்ஸியின் வருகைக்காகப் பல மணி நேரம் ஆரவாரத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக, அவர் அரங்கில் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்தார். இதனால் கொதிப்படைந்த ரசிகர்கள் விளையாட்டரங்கில் வன்முறையில் ஈடுபட்டனர்.


விளையாட்டரங்கின் இருக்கைகள் உடைக்கப்பட்டன, ஆடுகளத்திற்குள் நுழைந்த ரசிகர்கள் மேடையைச் சேதப்படுத்தினர், இச் சம்பவம்குறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவி வருகின்றன.


மேலும் உண்மையான ரசிகர்களுக்கு மெஸ்ஸியை நெருங்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
“மெஸ்ஸியைச் சுற்றி அரசியல் தலைவர்களும் திரைப் பிரபலங்கள் மட்டுமே இருந்தனர். ₹130 (இந்திய ரூபாய் மதிப்புக்கு) கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்கிய சாதாரண ரசிகர்களான எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது,” என்று பல ரசிகர்கள் கோபத்துடன் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.


மெஸ்ஸியின் வருகை கண்காட்சிப் போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் வன்முறைச் சம்பவம் கோல்கத்தாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.




