மவுண்ட் கியாராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, டிஃபானி கியாரா காண்டோமினியத்தில் நடந்த சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு NG999 அமைப்பு மூலம் அவசர அழைப்பு வந்ததாகக் கூறியது.
தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, 26ஆவது மாடியில் உள்ள ஒரு அலகு தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். தீயை அணைக்கவும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், கட்டிடத்தின் தீ தடுப்பு அமைப்பின் செயலிழப்பால் பாதிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட தளத்திற்கு தண்ணீரை அனுப்ப தீயணைப்பு வீரர்கள் இரண்டு சிறிய பம்புகள் மற்றும் ஒரு தீயணைப்பு இயந்திர பம்பை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அந்தத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் பால்கனியில் முழு உடல் தீக்காயங்களுடன் ஒரு ஆடவரை கண்டுபிடித்தனர். சுகாதார அமைச்சக மருத்துவ அதிகாரிகளால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதிகாலை 2.03 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அலகு 1,500 சதுர அடி எரிந்து நாசமானது என மதிப்பிடப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.




