உலகளாவிய செல்வப் போக்குகளை வெளிப்படுத்தும் UBS பில்லியனர் லட்சிய அறிக்கை 2025-இன் படி, இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 188-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில், நாட்டில் தொடர்ந்து வளர்ச்சியடைந்துவரும் செல்வத்தின் பிரதிபலிப்பாக தெரிகிறது.
அதே நேரத்தில், இந்தியாவின் அடுத்த தலைமுறை மிகப்பெரிய செல்வ மாற்றத்துக்குத் தயாராகி வருகிறது. UBS அறிக்கையின் கணிப்புகளின்படி, அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய பில்லியனர்களின் வாரிசுகள், சுமார் 382.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செல்வத்தை மரபுரிமையாகப் பெற வாய்ப்பு உள்ளது. இது தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் மிக உயர்ந்த அளவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தைகளில், 70 வயதுக்கும் மேற்பட்ட பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அடுத்த பத்தாண்டுகளில் பரம்பரை அல்லது வாரிசு சார்ந்த செல்வம் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. UBS அறிக்கையின் படி, இந்தியாவில் பில்லியனர்கள் 185-இல் இருந்து 188-ஆக உயர்ந்துள்ளனர். ஒட்டுமொத்த பில்லியனர்களின் செல்வம் மெதுவாக வளர்ந்தாலும், அவர்களின் வருங்கால வாரிசுகளின் செல்வ மாற்றம் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
உலகளாவிய அளவில், பில்லியனர்களின் ஒட்டுமொத்த செல்வம் 15.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது தொழில்நுட்பம் சார்ந்த லாபங்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோரின் வேகமான வளர்ச்சி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு, உலகளாவிய அளவில் 196 பேர் புதிய பில்லியனர்களாக மாறியுள்ளனர், இது 2021-க்கு பிறகு மிக உயர்ந்த அளவு என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பில்லியனர்கள் பெரும்பாலும் ஏஐ, சந்தைப்படுத்துதல், மென்பொருள், மரபியல், கிரிப்டோ மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் வெற்றியடைந்துள்ளனர்.
மற்றொரு முக்கியப் போக்கு, உலகளாவிய பில்லியனர்களின் எண்ணங்கள் தொடர்பானதாகும். பில்லியனர்களில் 82% பேர், தங்கள் குழந்தைகள், மரபுரிமை செல்வத்தை மட்டுமே நம்பி இருக்காமல், தங்களுக்கென சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதே சமயம், பில்லியனர்களில் 36% பேர், வாழ்க்கைத் தரம், வரி நெருக்கடி அல்லது புவிசார் அரசியல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, வேறு நாட்டுக்கு குடியேறியுள்ளனர், இது உலகளாவிய செல்வத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய அம்சமாகும்.
December 08, 2025 10:26 PM IST

