Last Updated:
கோர விபத்தில் சிலக்கலூர்பேட்டை அருகே விஞ்ஞான் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
ஆந்திராவில் ஐந்து கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கில், திடீரென பிரேக் இன்ஸ்பெக்டர் அவதாரம் எடுத்து தேசிய நெடுஞ்சாலையில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மகன் முக்கிய குற்றவாளி என்பது அம்பலமாகியுள்ளது.
வாத்தியார் மகன் மக்கு.. வைத்தியர் மகன் நோயாளி.. போலீஸ் மகன் திருடன் என்கிற பேச்சு வழக்கு கிராமங்களில் பரவலாக உள்ளது. அப்படி ஒரு பிரகஸ்பதி அரங்கேற்றிய சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து அப்பாவி உயிர்கள் பறிபோன சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என் அப்பா யார் தெரியுமா? என்கிற திமிர் தான் அவரை பிரேக் இன்ஸ்பெக்டர் அவதாரம் எடுக்க வைத்து வசூல் வேட்டையில் இறங்க வைத்துள்ளது. எஸ்.ஐ. மகனின் அந்த வசூல் வெறி தான், 5 கல்லூரி மாணவர்களின் இன்னுயிரை பறித்துள்ளது. ஆரம்பத்திலேயே தட்டிக் வைக்காத தந்தையால் 5 பேரின் உயிர் பறிபோன சம்பவத்தின் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலக்கலூர் பேட்டை அருகே கடந்த நான்காம் தேதி இரவு தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் வாகனங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென சாலை ஓரமாக பிரேக் அடித்து நின்ற போது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிலக்கலூர்பேட்டை அருகே விஞ்ஞான் கல்லூரியில் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
மாணவர்கள் ஐந்து பேரும் சபரிமலைக்கு செல்ல மாலை போட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று சபரிமலைக்கு செல்வதற்காக இருமுடி கட்ட கல்லூரியில் இருந்து காரில் புறப்பட்டு ஓங்கோல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தான் இந்த கோர விபத்தில் சிக்கினார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரித்த போது சில திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
சம்பவத்தன்று டிராக்டர்கள் ஏற்றப்பட்ட லோடு லாரியை ஓவர் டேக் செய்த கார் ஒன்று முன்னாள் சென்று லாரியை மறித்து நிறுத்தியிருக்கிறது. காரிலிருந்து பிரேக் இன்ஸ்பெக்டர் போல் தோற்றமளித்தவர்கள் இறங்கியதால், லோடு லாரியை சடன் பிரேக்போட்டு நிறுத்தியிருக்கிறார் லாரி டிரைவர். இதனால் பின்னால் வந்த கல்லூரி மாணவர்கள் காரின்வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
நெடுஞ்சாலையில் லோடு லாரியை மறித்தவர்கள் குறித்து விசாரித்தபோது மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன. நரசராவ் பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் உதவி காவல் ஆய்வாளராக வேலை செய்யும் ஒருவரின் மகன் வெங்கட் நாயுடு. இந்த வெங்கட் நாயுடு தான் தந்தையின் பெயரை கெடுப்பதற்கென்ற மோசடி வேலைகளை அரங்கேற்றி வந்திருக்கிறார். ஏற்கனவே குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி 40 லட்ச ரூபாயை ஏமாற்றிய வழக்கு வெங்கட் நாயுடு மீது உள்ளது.
அந்த வழக்கு நடைபெற்று வந்து நிலையில், திடீரென பிரேக் இன்ஸ்பெக்டர் அவதாரம் எடுத்திருக்கிறார் வெங்கட் நாயுடு இரவானால் போதும் தனது கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு காரில் சென்றுவிடுவார். தேசிய நெடுஞ்சாலைகளில் லோடு லாரிகளை நிறுத்தி பிரேக் இன்ஸ்பெக்டர் என தோரணையாக காட்டிக் கொண்டு வசூல் வேட்டையாடுவது தான் அவரது லேட்டஸ்ட் பிசினஸ். அப்படி ஒரு வசூல் வேட்டைக்காக டிராக்டர் லோடு லாரியை நிறுத்திய போது தான் அந்த கோர விபத்து நிகழ்ந்து 5 மாணவர்களின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. இந்த உண்மைகளை போலீசார் கண்டுபிடித்த நிலையில், போலீசார் வெங்கட் நாயுடுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
December 08, 2025 8:27 PM IST
லாரி மீது கார் மோதல்.. கோர விபத்துக்கு காரணமாக இருந்த அந்த நபர்.. விசாரணையில் வெளியான ஷாக் தகவல்!


