Last Updated:
தாயும், தந்தையும் சிறிதும் சலணமின்றி நின்றபோது, தங்கைகள் மட்டும் “வேண்டாம்.. வேண்டாம்..” என்று கெஞ்சி கதறியுள்ளனர்.
பஞ்சாபில் தந்தையால் கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக கூறப்பட்ட 17 வயது சிறுமி, இரண்டு மாதங்களுக்குப் பின் உயிருடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுர்ஜித் சிங். இவருக்கு, திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், 17 வயதான மூத்த மகள் அண்மையில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். அவரின், நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பெற்றோர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல் கொலை செய்ய துணிந்துள்ளனர்.
அதன்படி கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி, அந்த சிறுமியை வீட்டின் அருகே உள்ள கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, சிறுமியின் கைகளை கயிறால் தந்தை சுர்ஜித் சிங் கட்டியுள்ளார். அப்போது, தனக்கு நடக்க உள்ள கொடூரத்தை எண்ணி எதுவும் செய்ய முடியாமல் அந்த சிறுமி கையறு நிலையில் இருந்துள்ளார். அதைக் கண்டு பெற்ற தாயும், தந்தையும் சிறிதும் சலணமின்றி நின்றபோது, தங்கைகள் மட்டும் “வேண்டாம்.. வேண்டாம்..” என்று கெஞ்சி கதறியுள்ளனர்.
அதை காதில் வாங்கிக் கொள்ளாத தந்தை, தனது மூத்த மகளை கயிறை கட்டி கால்வாயில் தள்ளியுள்ளார். அந்த கொடூர சம்பவத்தை தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார். பின்னர், இந்த வீடியோ ஆதாரத்தை கொண்டு உறவுக்கார பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் சிறுமியின் தந்தை சுர்ஜித் சிங்கை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி உயிருடன் திரும்பி வந்துள்ளார்.
அதை பார்த்து தங்கைகள் இன்ப அதிர்ச்சியடைந்த நிலையில், பெற்ற தாய் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். உயிர் பிழைத்தது குறித்து கூறிய சிறுமி, கால்வாய்க்குள் தன்னை கயிறை கட்டி தள்ளியதும் நீரோட்டம் அதிமாக இருந்தாக தெரிவித்துள்ளார். அதனால், கையில் கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்ந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பியதாக கூறியுள்ளார். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி படுகாயத்துடன் கிடந்ததை கண்டு, மூன்று பேர் அவரை மீட்டுள்ளனர்.
ஆனால், இந்தனை நாட்களாக எங்கிருந்தார் என்பதை சிறுமி தெரிவிக்கவில்லை. சம்பவத்து அன்று தனது தந்தை மது போதையில் இருந்ததாகவும், தாயாரின் தூண்டுதலின் பேரிலேயே அவர் கொலை செய்ய துணிந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே, தாயார் தான் உண்மையான குற்றவாளி என சாடியுள்ளார். இதையடுத்து அவரது தாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தங்கைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது தந்தையை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கெஞ்சி கேட்டுள்ளார். ஈவுஇரக்கமின்றி தன்னை கொலை செய்ய துணிந்த தந்தையை காப்பாற்ற, அதே மகள் இரண்டு மாதங்களுக்குப் பின் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
December 08, 2025 7:28 PM IST


