Last Updated:
கோவா அர்போரா ரோமியோ லேன் நைட் கிளப்பில் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். பிரமோத் சாவந்த் விசாரணை உத்தரவு, 4 பேர் கைது, நிவாரணம் அறிவிப்பு.
நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கோவாவில் வழக்கம் போல வீக் எண்ட் கொண்டாட்டம் களைக்கட்டியது. அம்மாநிலத்தின் வடக்கில் உள்ள அர்போராவில் நதிக்கரையோரம் ரோமியோ லேன் என்ற நைட் கிளப்பில் இசைக்கச்சேரி நடைபெற்றது. இசைக்கு ஏற்ப நடன மங்கை நளினத்துடன் நடனமாடியதை சுமார் 100 இளைஞர்கள் உலகை மறந்து ரசித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மேற்கூரையில் ஏற்பட்ட தீயை கண்டு அனைவரும் அலறி அடித்து ஓடத் தொடங்கினர். நைட் கிளப்பின் மேற்கூரை பனை ஓலையால் பின்னப்பட்டு இருந்ததால், கண் இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவியது. கொழுந்து விட்டு எரிந்த தீ, கரும்புகை மூட்டம், குறுகலான வழித்தடம் என தப்பிப்பதற்கு துளியும் வாய்ப்பு கிடைக்காமல் இளைஞர்கள் திண்டாடினர்.
அனைத்திற்கும் மேலாக, தீயணைப்பு வாகனம் அந்த நைட் கிளப்பை நெருங்கவே முடியவில்லை. நைட் கிளப்பில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவு வரை மட்டுமே தீயணைப்பு வாகனத்தால் செல்ல முடிந்தது. தீவு கிளப் என்ற புனைப் பெயர் கொண்ட இந்த நைட் கிளப்பிற்கான நுழைவு வாயில் மிகவும் குறுகலாக இருந்ததே அதற்கு காரணம்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்ட நிலையில், நைட் கிளப் முழுவதும் தீக்கிரையானது. பார்ட்டியில் பங்கேற்ற 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதில் 5 பேர் சுற்றுலாப் பயணிகள், 20 பேர் ஊழியர்கள். சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், மின் பட்டாசால் விபத்து ஏற்பட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அதாவது இசை மற்றும் நடனக் கச்சேரியின் போது மின் பட்டாசு கொளுத்தியதில் மின்சாரம் கசிந்து பனை ஓலையில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக, கிளப் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதே போன்று, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவாவில் உள்ள சட்டவிரோதமான விடுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தெற்கு கோவா ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு ஒரு வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உள்ளது. அதன்பிறகே, தீ விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
December 08, 2025 8:20 AM IST


