
வடக்கு கோவாவில் செயல்பட்டு வந்த இரவு விடுதியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து கோவா காவல்துறை தலைவர் அலோக்குமார் கூறியதாவது:
வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் சுற்றுலாப் பயணிகள், விடுதி ஊழியர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணி்களில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து சமையல் அறை பகுதியில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை இவ்வாறு அவர் கூறினார்.
மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் எம்.எல்.ஏ., மைக்கேல் லோபோசம்பவம் நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டனர்.

