Last Updated:
Reserve bank of india | ரிசர்வ் வங்கி ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகள் அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நாட்டில் தற்போது அனைத்து பணப்பரிவர்த்தனையும் வங்கிகள் மூலமே நடைபெறும் நிலையில் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் எப்போதும் குறைந்தபட்ச இருப்பை வைத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில் வங்கிகள் அபராதமாக குறிப்பிட்ட பணத்தைப் பிடித்து கொள்கிறது. இருப்பினும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்ற அறிவிப்பை கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி. இது Basic Savings Bank Deposit Account என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டது. இதனை பொதுவாக ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்றும் அழைக்கலாம்.
இந்நிலையில் இந்த குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கில் பல்வேறு சீர்திருத்தங்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி அனுப்பலாம் என்றும் இலவசமாக ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
மேலும் ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம் அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்ல் மாதத்திற்கு 4 முறை இலவசமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றும் UPI, NEFT, RTGS, IMPS உள்ளிட்ட மின்னணு வழியாக பணம் பெறும் டிஜிட்டல் பேமண்ட்டுகள் இந்த கணக்கில் அடங்காது என்றும் ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதனிடையே ஏடிஎம் அட்டைகள், செக் புத்தகங்கள் மற்றும் Internet, mobile banking உள்ளிட்ட எந்த சேவைகளையும் பெற வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த சேவைகளை பெற விரும்புவோர், தற்போது வைத்திருக்கும் தங்கள் சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டாக மாற்றலாம் என்றும் அதனை வங்கி 7 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஒரே வாடிக்கையாளர் ஒரு ஜிரோ பேலன்ஸ் அக்கவுண்ட்க்கு மேல் வைத்திருக்க முடியாது என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டை தொடங்கும்போது இதனை எழுத்துப்பூர்வமாக வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வங்கியில் கணக்கை தொடங்குவதை விட அதனை மெயிண்டெயின் செய்வது பெரிய சவாலாக இருக்கும் நிலையில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த சலுகைகளுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
December 06, 2025 7:52 AM IST


