Last Updated:
India vs South Africa ODI | டெஸ்ட் தொடரில் தோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இரு போட்டிகளிலும் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் போட்டியில் 349 ரன்களை குவித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2ஆவது போட்டியிலும் 358 ரன்களை குவித்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டது. இந்நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக 3ஆவது போட்டி அமைந்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரைக் கைப்பற்றிய பின்னரும், கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்ட பின்னரும் இந்தியா ஒரு நாள் தொடரைக் கைப்பற்றவில்லை.
ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் இரு அணிகளும் தொடரை கைப்பற்றும் நோக்குடன் ஆக்ரோஷமாக மோதும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாக இருப்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு ஓய்வளித்து மிடில் ஆர்டர் பேட்டிங்கை பலப்படுத்த திலக் வர்மாவுக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
December 06, 2025 9:01 AM IST


