Last Updated:
பல துறைகளிலும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆயத்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 நாள் பயணமாக, ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதினுடன் பாதுகாப்பு, ஆற்றல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசு ஆயத்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் நடைபெற உள்ள 23 ஆவது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டு அதிபர் புதின் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகிறார். உக்ரைனுக்கு எதிரான போர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா வரும் புதின் மீது உலக நாடுகளின் பார்வை திரும்பியுள்ளது. குறிப்பாக, புதின் இந்தியா வருவதற்கு முன்பே, இரு நாடுகளுக்கு இடையே, RELOS எனப்படும் தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜெலன்ஸ்கி – புதின்
இதன் மூலம், இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மற்ற நாட்டின் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா வரும் புதின் முன்னிலையில், எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் சுகோய் 57 போர் விமானங்களை கூடுதலாக வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகள் குறித்தும், மத்திய எரிசக்தி துறை சார்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தடையற்ற வர்த்தகம், ஆற்றல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளிலும் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
December 04, 2025 6:43 AM IST


