கோலாலம்பூர்:
மலேசியாவுக்குள் நுழையும் சிங்கப்பூர் சுற்றுலாப் பேருந்துகள், நாட்டில் விரைவுப் பேருந்து சேவைகளை நடத்தவோ அல்லது விரைவுப் பேருந்துக்கான பயணச் சீட்டுகளை விற்பனை செய்யவோ அனுமதி இல்லை என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தியுள்ளார்.
விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
செவ்வாய்க்கிழமை மலேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், “சுற்றுலாப் பேருந்துகள் மலேசியாவுக்கு வருகையாளர்களை அழைத்து வருகின்றன; அது நாட்டின் சுற்றுலாத் துறைக்கு சாதகமானது. எனவே, அவற்றின் நுழைவைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் எண்ணம் கொண்டதல்ல. ஆனால், சுற்றுலாப் பேருந்துகளுக்கு வழங்கப்படும் அனுமதி, விரைவுப் சேவை நடத்தும் அளவிற்கு விரிவுபடுத்தப்படாது,” என்றார்.
மேலும், “சிங்கப்பூரின் சுற்றுலாப் பேருந்துகள் விரைவுப் பேருந்துகளாக செயல்படக் கூடாது; அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களில் விரைவுப் பயணச்சீட்டுகளை விற்கவும் அனுமதி இல்லை. விதிகளை மீறும் எந்த பேருந்தும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, சிங்கப்பூரின் விரைவுப் பேருந்துகளுக்கு மலேசியாவில் இயங்க அனுமதி கோரியிருந்ததாக,
“ஆனால், விரைவுப் பேருந்து சேவைக்கான தனிச்சட்ட கட்டமைப்பு சிங்கப்பூரில் இல்லை. அங்கு வழக்கமான பயணம் மற்றும் சுற்றுலா சேவைகளுக்கே சட்ட அனுமதி உள்ளது. ஆகவே, அந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது,” என்று அமைச்சர் கூறினார்.
எதிர்க்கட்சியான Perikatan Nasional-ஐச் சேர்ந்த Ahmad Marzuk Shaary எழுப்பிய பாதுகாப்பு சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ச்சியாக பதிலளித்த அவர், மலேசியாவின் ‘Puspakom’ உள்ளிட்ட சோதனை விதிமுறைகளை பூர்த்தி செய்யாத சிங்கப்பூர் பேருந்துகளுக்கு இயங்க அனுமதி வழங்கப்படாது என்றும், உள்ளூர் பேருந்து நிறுவனங்களின் நலன் பாதிக்கப்படாது என்றும் உறுதியளித்தார்
The post மலேசியாவில் விரைவுச் சேவையில் ஈடுபட சிங்கப்பூர் சுற்றுலாப் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை: அந்தோணி லோக் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

