சிட்னி:
உலகிலேயே முதன்முறையாக, பதின்ம வயதினர் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. இந்த அரசாணைக்குத் தாம் இணங்குவதாக Google நிறுவனத்தின் YouTube தளம் அறிவித்துள்ளது. இதையடுத்து, டிசம்பர் 10 முதல் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளோர் தங்கள் யூடியூப் கணக்குகளில் இருந்து வெளியேற்றப்படுவர்.
இந்தத் தடை காரணமாக ஆஸ்திரேலிய அரசுக்கும் கூகலுக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவியது. ஆரம்பத்தில் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுவதால், யூடியூப் இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த விலக்கு நீக்கப்பட்டு, யூடியூபும் தடை விதிக்கப்பட்ட தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூகல் வெளியிட்ட அறிக்கையில், “இனி யூடியூப்பில் ‘சைன் இன்’ செய்ய பயனர்கள் குறைந்தபட்சம் 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தது. அதேவேளை, இந்தச் சட்டம் குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தாது; மாறாக, சில அம்சங்களில் பாதுகாப்பு மேலும் சிக்கலாகலாம் என்றும் கூகல் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து, யூடியூப்பை தடையில் சேர்த்ததை எதிர்த்து சட்டரீதியான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் கூகல் கூறியுள்ளது. இதேபோன்ற வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளைப் பற்றி பரிசீலித்துவரும் பல நாடுகள், ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. தகவல் தொழில்நுட்ப மையங்களின் பொறுப்பும், குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பும் குறித்த உலகளாவிய விவாதத்திற்கு இது முக்கியத் தொடக்கப் புள்ளியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


