Last Updated:
டெல்லியில் கட்டப்பட்டுள்ள பிரதமரின் புதிய அலுவலகத்திற்கு சேவா தீர்த் என பெயரிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு பல முக்கிய இடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலை, கடந்த 2016-ஆம் ஆண்டு லோக் கல்யாண் மார்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும் ராஜ் பாத், கடமை பாதை என பொருள்படும் கர்தவ்யா பாத் என மாற்றப்பட்டது. இதையடுத்து, அண்மையில் நாடு முழுவதும் ராஜ் பவன் என அழைக்கப்படும் ஆளுநர் மாளிகைகளின் பெயர், மக்களின் இல்லம் என பொருள்படும் லோக் பவன் என மாற்றம் செய்யப்பட்டது.
2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் திறக்கப்பட்ட நிலையில், அதன் அருகே மத்திய அரசுச் செயலகங்களுக்கான புதிய கட்டடங்களை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பிரதமர் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்திற்கு சேவா தீர்த் என பெயரிடப்பட்டுள்ளது.
மக்களின் சேவைக்கான இடம் என பொருள்படும் வகையில் சேவா தீர்த் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கட்டடத்திற்கு பிரதமர் அலுவலகம் விரைவில் இடம் மாறவுள்ளதாக கூறப்படுகிறது.
December 02, 2025 10:03 PM IST


