Last Updated:
பிரேசிலில் ஜோவோ பெசோவா மிருகக் காட்சி சாலையில், கெர்சன் டி மெலோ மச்சாடோ லியோனா சிங்கம் கூண்டுக்குள் நுழைந்து தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
பிரேசிலில் மிருக காட்சி சாலைக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞரை, சிங்கம் ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரேசிலில் ஜோவோ பெசோவா நகரில் பிரபல மிருகக் காட்சி சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் சிங்கம், புலி, கரடி, யானை உட்பட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விலங்கும் வெவ்வேறு பகுதியில் அடைத்து வைத்து பராமரிக்கப்படுகிறது. இதில், உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டு உரிய பாதுகாப்புடன் சிங்கங்களை, சரணாலய ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.
லியோனா என்ற பெண் சிங்கம் தனது கூண்டின் அருகே படுத்திருந்தது. அப்போது, பார்வையாளர்கள் பலரும் கம்பி வேலிக்கு அருகில் இருந்து லியோனாவை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென சற்று தொலைவில் ஒரு இளைஞர் சிங்கத்தின் கோட்டைக்குள் இறங்கியுள்ளார். அதைக் கண்டு அங்கிருந்த பார்வையாளர்கள் சத்தம் போட்டு எச்சரித்துள்ளனர். ஆனால், அதை காதில் வாங்கிக் கொள்ளாத இளைஞர், 20 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவரை ஒட்டியுள்ள மரத்தில் ஏறி மெல்ல கீழே இறங்கியுள்ளார்.
தனது இருப்பிடத்திற்குள் அத்துமீறி உள்ளே ஒருவர் இறங்குவதை கண்ட சிங்கம், சீற்றத்துடன் அங்கு பாய்ந்து சென்றது. அருகில் சென்றதும் மரத்தில் இருந்த இளைஞரை பார்த்து சிங்கம் கர்ஜித்தது. முதலில் சற்று யோசித்து அமைதியாக இருந்த இளைஞர், திடீரென ஆபத்தை உணராமல் கீழே இறங்கினார். அதைக் கண்டு சினம் கொண்ட சிங்கம், இளைஞரை இழுத்துச் சென்று கடித்துக் குதறியது. அதைக்கு கண்டு சரணாலய ஊழியர்கள் சிங்கத்திடம் இருந்து போராடி இளைஞரை மீட்டனர்.
ஆனால், சிங்கம் தாக்கியதில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், சிங்கம் தாக்கி உயிரிழந்தவர் 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்பது தெரியவந்தது. இவர், ஏற்கனவே ஆப்ரிக்காவில் உள்ள சிங்கங்களுக்கு பயிற்சி அளிக்கப்போவதாக கூறி, விமானத்தில் லேண்டிங் கியரில் ஏறியுள்ளார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் கெர்சன், தற்போது சிங்கத்தை அடக்குவதாக கூறி அதன் கூண்டுக்குள் இறங்கி உயிரை பறிகொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து சரணாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், சிங்கம் லியோனா ஆக்ரோஷமின்றி இயல்பாக உள்ளதாக அதை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசிலில் விலங்குகள் சரணாலயத்தில் சிங்கத்தை அடக்குவதாக கூறிக் கொண்டு, அத்துமீறி நுழைந்த இளைஞர் சிங்கத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
December 02, 2025 4:53 PM IST
சிங்கத்தின் கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்.. பார்வையாளர்கள் அதிர்ச்சி.. அடுத்து என்ன நடந்தது?


