Last Updated:
இலங்கைக்கு பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களின் EXPIRY DATE முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இயற்கை பேரிடரால் லட்சக்கணக்கான மக்கள் இலங்கையில் பெரும் துயரத்தில் இருந்து வரும் வேளையில், பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் EXPIRY DATE முடிந்திருப்பதாக படங்கள் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை புரட்டிப்போட்டுள்ளது. இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால், திரும்பும் திசையெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை நின்றபோதும் வெள்ளம் வடியாததால் அந்நாட்டு மக்கள் சொல்லொணா துயரில் மூழ்கி உள்ளனர்.
இந்த டிட்வா புயல் மழை பாதிப்புகளில் இதுவரை இலங்கையில் 334 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான இலங்கை பெரும் இயற்கை பேரிடரில் சிக்கி சொல்லொண்ணா துயரத்தில் தத்தளித்துவரும் சூழலில், இந்தியா உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்ள இலங்கைக்கு உதவியாக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பியது. தொடர்ந்து பல டன் நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
இதேபோல், பாகிஸ்தான் சார்பிலும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த நிவாரணப் பொருட்களின் புகைப்படத்தை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

அந்தப் படங்களில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களின் தயாரிப்பு வருடம் 2022 என்றும், பயன்படுத்த உகந்த காலம் 2024-க்கு முன்பும் என பதியப்பட்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டோடு பயன்பாடு முடியும் பொருட்களை 2025ஆம் ஆண்டு, அதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புவதா என இணையத்தில் அந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து அந்தப் பதிவை நீக்கியுள்ளது. இருந்தபோதிலும், இதுவரை அது தொடர்பான எந்த விளக்கத்தையும் அந்நாடு கொடுக்கவில்லை.
ஏற்கனவே இயற்கை பேரிடரில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்தில் இருந்து வரும் வேளையில், பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் காலாவதி தேதி முடிந்திருப்பதாக வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
December 02, 2025 3:45 PM IST


