Last Updated:
டிஜிட்டல் கைது முறைகேடு விசாரணைக்கு சிபிஐக்கு முழு சுதந்திரம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது; தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்ச்சி அமர்வில் தீர்மானம்.
டிஜிட்டல் கைது முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்த சிபிஐக்கு முழு சுதந்திரம் வழங்குவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்ச்சி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டிஜிட்டல் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு ஒப்புதல் அளிக்காத மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இதன் மூலம், தகவல் தொழில் நுட்ப சட்டம் 2021ன் கீழ் விரிவான நடவடிக்கையை சிபிஐ எடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
சர்வதேச அளவில் முறைகேடு நடைபெற்றிருந்தால், அது தொடர்பாக தங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்பதால், இந்த விவகாரத்தில் சிபிஐ சர்வதேச காவல்துறையை நாடலாம் என்றும் அறிவுறுத்தினர். டிஜிட்டல் கைது முறைகேடு விவகாரத்தில் மாநில சைபர் குற்ற மையங்களை விரைவாக நிறுவுதல் குறித்தும், அதற்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கியை எதிர் மனுதாரராக இணைத்த நீதிபதிகள், மாநிலங்களில் சைபர் குற்றங்களுக்காக புகாரளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட அனைத்து தொலைபேசி, செல்போன் தரவுகளையும் பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக ஏ.ஐ.உதவியுடன் முறைகேட்டாளர்களை கண்டறிந்து வங்கிக் கணக்குகளை முடக்க முடியுமா என்பது குறித்து நீதிமன்றத்திற்கு ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.
Delhi,Delhi,Delhi
December 01, 2025 9:46 PM IST


