Last Updated:
நீண்ட காலமாக அணியில் இருந்த ஒருவரை அணி நிர்வாகம் விடுவித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து முன்னணி ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரசல் ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு புதிய வாய்ப்பினை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இதே ஸ்டைலில் ஏராளமான பிரிமியர் லீக் போட்டிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த சீசனுக்காக தயாராகி வருகிறது. இதனையொட்டி சமீபத்தில் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 16ஆம் தேதி அபுதாவியில் ஐபிஎல் மினி ஏலம் நடத்தப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் அந்த அணிக்காக ஏராளமான போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். மிகச் சிறந்த ஐபிஎல் வீரராக கருதப்படும் அவர் கடந்த சில ஆண்டுகளாக ஜொலிக்க முடியாமல் சற்று தடுமாறி வந்தார்.
அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ளாமல் விடுவித்தது. அப்போது நீண்ட காலமாக அணியில் இருந்த ஒருவரை அணி நிர்வாகம் விடுவித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் ரசல் ஐபிஎல் தொடர்களில் இருந்து ஓய்வை இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆண்ட்ரே ரசலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது பயிற்சியாளர்களில் ஒருவராக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஐபிஎல் தொடர்களில் விளையாடாவிட்டாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருப்பார்.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் இருந்து வருகிறார். அவரது வழிகாட்டுதலின்படி ஆண்ட்ரே ரசல் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
November 30, 2025 6:54 PM IST


