Last Updated:
6 சர்வதேச முக்கிய விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு விமானங்கள் இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்
வெனிசுலா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குப் போதைப் பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வருவதாகப் புகார்கள் கூறும் அமெரிக்கா, வெனிசுலா நாட்டிற்குத் தனது வான்வெளி எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு நடைமுறைக்கு இன்னும் முழுமையாக வராத சூழலில், இது தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு வெனிசுலா நாட்டில் இருந்து அதிக அளவு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அமெரிக்காவில் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாகவும், இந்த மறைமுகத் தாக்குதல் நடவடிக்கையின் பின்னணியில் சீனா வெனிசுலாவுக்கு உதவி வருவதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இதை அடுத்து அமெரிக்கா தனது கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று வெனிசுலா நாட்டிற்குத் தனது வான்வெளிகளை மூடுவதாகக் கூறியிருந்தார்.
இருப்பினும், இது தொடர்பான என்ன நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது பற்றி கூடுதல் விவரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெனிசுலாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, டிரம்ப்பின் கருத்துக்கள் வெனிசுலாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், காலனித்துவ அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்.ஏ.ஏ. வெனிசுலாவில் விமானங்களை இயக்குவது குறித்து வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
November 30, 2025 12:24 PM IST
போதைப் பொருட்களைக் கடத்தி வருவதாகப் புகார்.. வெனிசுலா மீது நடவடிக்கை மேற்கொள்ளும் அமெரிக்கா..


