WPL எனும் மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா அதிகபட்ச விலைக்கு உத்தரபிரதேச அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் இடையிலான 4 ஆவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5 அணிகளில் விளையாடுவதற்காக 50 இந்திய வீராங்கனைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 73 பேரை தேர்வு செய்வதற்கான ஏலம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஏலப்பட்டியலில் 83 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றனர்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் கலக்கிய ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா மற்றும், தென்னாப்ரிக்கா கேப்டன் உல்வார்ட், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது. அடிப்படை விலை 50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட தீப்தி சர்மா 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு உ.பி. வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன்மூலம் மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்மிருதி மந்தனாவிற்கு அடுத்து அதிக ஊதியம் பெறும் இரண்டாவது இந்திய வீராங்கனையாக தீப்தி சர்மா உருவெடுத்துள்ளார்.
உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீசரணியை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணியும், ஆஷா சோபனாவை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு உ.பி. வாரியர்ஸ் அணியும் வாங்கின. வெளிநாட்டு வீராங்கனைகளில், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அமெலியா கெர் மும்பை இந்தியன்ஸ் அணியால், 3 கோடி ரூபாய்க்கு மீண்டும் வாங்கப்பட்டார். மற்றொரு நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டெவின் குஜராத் அணியால் 2 கோடி ரூபாய்க்கும், மெக் லேனிங் உ.பி. அணியால் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா உல்வார்ட் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளரான எக்லெஸ்டோனை, ஏலத்தில் எடுக்க பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவியபோதும், உ.பி. வாரியர்ஸ் அணி 85 லட்சம் ரூபாய்க்கு ரைட்-டு-மேட்ச் எனப்படும் ‘RTM’ கார்டு மூலம் தக்கவைத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 60 லட்சத்திற்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். பெங்களூரு அணி RTM கார்டைப் பயன்படுத்தி, இதுவரை விளையாடாத ஆல்ரவுண்டரான பிரேமா ராவத்தை 20 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது.
மும்பை அணியும் சமஸ்கிருதி குப்தாவை 20 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது. அதுபோல், இதுவரை விளையாடாத தியா யாதவ் டெல்லி அணியால் அவரது அடிப்படை விலையான 10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணி கேப்டனும், அதிரடி வீராங்கனையுமான அலிசா ஹீலி எந்த அணியாலும் வாங்கப்படாமல் அன்சோல்டு ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் ஆஸி அணியில் வளர்ந்து வரும் இளம் வீராங்கனை லிச்பீல்ட் ரூ.1.2 கோடிக்கு உ.பி வாரியர்ஸால் வாங்கப்பட்டார்.
மெகா ஏலத்தின் மூலம் 67 வீராங்கனைகள் பரிமாற்றப்பட்டுள்ளனர். ஐந்து அணிகளும் ஒட்டுமொத்தமாக 40 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளன. குறிப்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு அணிகள் அதிகபட்சமாக செலவழித்துள்ளன.

